Published : 07 Jun 2021 10:30 AM
Last Updated : 07 Jun 2021 10:30 AM
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு இன்றுமுதல் அமலாகிறது. 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடனும், 27 மாவட்டங்களில் தளர்வுகளுடனும் அமலாகிறது. மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால் உயிரிழப்பும், தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தது. தினசரி தொற்று எண்ணிக்கை உச்சபட்சமாக 32000 வரை சென்றது. சென்னையில் ஒரு நாள் தொற்று 6500 வரைச் சென்றது. இதையடுத்து தளர்வுகளை நீக்கியது அரசு, பின்னர் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என அமல்படுத்தியும் தொற்று எண்ணிக்கை குறையவில்லை.
இதையடுத்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மே 24 முதல் ஊரடங்கு கடுமையாக அமலானது. பின்னர் ஜூன் 7 வரை அது நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தமிழகத்தில் நேற்று வரை தினசரி தொற்று எண்ணிக்கை 20,421 என்கிற அளவுக்கு குறைந்தது. சென்னை 1,644 ஆக குறைந்தது. ஆனாலும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தொற்றின் அளவு குறையவில்லை.
இதையடுத்து ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அரசு நீட்டித்தது. இதில் முழு ஊரடங்கு ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
எனவே மேற்கண்ட மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் மற்ற 27 மாவட்டங்களுக்கும் இந்த தளர்வுகள் உண்டு.
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
*காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
*மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை நிறுவனங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
*இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவுகள் செய்ய அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் நடந்துச் சென்று பொருட்களை வாங்கலாம், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
இது தவிர 27 மாவட்டங்களில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்.
*தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பணிவுடன் அனுமதிக்கப்படும்.
*மின் பணியாளர் நம்பர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
* மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் 6 மணி முதல் 5 மணி வரை செயல்படும்.
* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
* வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு உதவியுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு நபர்களும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் இரு சக்கர வாகனங்களில், 4 சக்கர வாகனங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உரிய காரணங்களுக்காக வெளியில் சென்றால் இ-பதிவு செய்து வெளியே செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT