Last Updated : 28 Dec, 2015 04:52 PM

 

Published : 28 Dec 2015 04:52 PM
Last Updated : 28 Dec 2015 04:52 PM

இரும்பு மிதவை கூண்டில் சிங்கி இறால் வளர்ப்பு: சிப்பிகுளத்தில் சோதனை முயற்சி வெற்றி

தூத்துக்குடி அருகே கடலில் இரும்பு மிதவை கூண்டில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளது. சிப்பி குளம் பகுதியில் சோதனை அடிப்படையில் வளர்க்கப்பட்ட சிங்கி இறால் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.

கடலில் மிதவை கூண்டு களில் சிங்கி இறால் வளர்க் கும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. உயர் அழுத்த பாலிஎத்திலின் மற்றும் பிளாஸ்டிக் கூண்டுகள் இதற்கு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கூண்டுகள் செய்ய ரூ.3.5 லட்சம் வரை செலவாகிறது. மேலும், குறைந்த எண்ணிக்கையில் தான் சிங்கி இறால்களை இந்த கூண்டுகளில் வளர்க்க முடியும்.

சிப்பிகுளத்தில் அறிமுகம்

இந்நிலையில் அதிக எண்ணிக் கையில் சிங்கி இறால்களை வளர்க்கும் வகையில் செலவு குறைந்த இரும்பு மிதவை கூண்டுகளை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த கூண்டை உருவாக்க ரூ.1.2 லட்சம் மட்டுமே செலவாகிறது. மேலும், இந்த கூண்டில் 2,000 சிங்கி இறால் வரை வளர்க்க முடியும்.

செலவு குறைந்த இரும்பு மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தூத்துக்குடி அருகேயுள்ள சிப்பிகுளத் தில் தொடங்கப்பட்டது.

சிப்பிக்குளத்தை சேர்ந்த எம். குமரேசன், ஆர். ரெக்ஸன் ஆகியோர் சோதனை அடிப்படை யில் இரும்பு மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினர்.

தொடர் கண்காணிப்பு

இந்த கூண்டுகளில் 550 சிங்கி இறால் குஞ்சுகள் விடப்பட்டன. அருகில் உள்ள மீன் இறங்கு தளங்களில் வலைகளில் சிக்கி வரும் 40 முதல் 60 கிராம் எடையுள்ள சிங்கி இறால் குஞ்சுகளை சேகரித்து, அவற்றை கூண்டுகளில் போட்டு வளர்த்தனர்.

மீனவர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவி களையும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அளித்தனர். 15 நாட்களுக்கு ஒரு முறை விஞ்ஞானிகள் கூண்டு களில் உள்ள சிங்கி இறால்களை கண்காணித்து வந்தனர்.

அறுவடை தொடங்கியது

தற்போது 90 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கி இறால்கள் சராசரியாக 225 கிராம் எடை அளவுக்கு வளர்ந்துள்ளன. சிங்கி இறால் மீன்கள் 1 கிலோ எடை வரை வளரும். அதற்கு நீண்ட காலம் ஆகும். மேலும், கூடுதல் செலவும் ஏற்படும்.

200 கிராமுக்கு மேற்பட்ட சிங்கி இறால்களுக்கு தான் உலகளவில் வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை ஒட்டி வெளிநாடுகளில் சிங்கி இறால்களுக்கு வரவேற்பு இருக்கும் என்பதாலும் அவற்றை அறுவடை செய்ய மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

100 கிலோ அறுவடை

கூண்டில் சிங்கி இறால் வளர்த்த சிப்பிகுளத்தை சேர்ந்த ஆர். ரெக்ஸன் கூறும்போது, ‘ஒரு கூண்டில் சிங்கி இறால் வளர்த்துள்ளேன். அவை நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன. தற்போது அறுவடையை தொடங்கியுள்ளோம். கூண்டில் உள்ள சிங்கி இறால்கள் மொத்தம் 100 கிலோ எடை அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றுக்கு ரூ.1.80 லட்சம் விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கூண்டு வடிவமைத்தல், நிறுவுதல், உணவு போடுதல், தொடர் கண்காணித்தல் என இதுவரை ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். சோதனை அடிப்படையில் தான் முதலில் வளர்த்து அறுவடையை செய்துள்ளோம். முதல் முறையே மொத்த லாபமும் கிடைத்துவிடாது. தொடர்ச்சியாக வளர்க்கும் போது நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அறுவடை முடிந்து அடுத்த மாதம் சிங்கி இறால் குஞ்சுகளை மீண்டும் கூண்டில் விடவுள்ளேன். இம்முறை கூடுதல் குஞ்சுகளை விட திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே உள்ள கூண்டிலேயே அடுத்த முறையும் குஞ்சுகளை விடுவதால் முதலீடு அதிகம் தேவைப்படாது. இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் மேலும் சில கூண்டுகளிலும் சிங்கி இறால்களை வளர்க்க முடிவு செய்துள்ளேன்’ என்றார் அவர்.

நல்ல வளர்ச்சி

இதுகுறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சி. காளிதாஸ் கூறும் போது, ‘இரும்பு மிதவை கூண்டில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் சிப்பிகுளம் பகுதியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அங்குள்ளதை விட சிப்பிகுளத்தில் சிங்கி இறால்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த இரும்பு மிதவை கூண்டு செலவு குறைவானது. இந்த கூண்டை நான்கு ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். இடையிடையே சுத்தம் செய்து பெயிண்டிங் மட்டும் செய்தால் போதும்.

மானிய உதவி

இந்த திட்டம் சோதனை அடிப்படையில் சிப்பிகுளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வெற்றியடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், கொம்புதுறை, மணப்பாடு உள்ளிட்ட பிற பகுதி மீனவர்களும் இந்த திட்டத்தில் சிங்கி இறால் வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் நாங்கள் செய்து கொடுப்போம். கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்க மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு மானிய உதவிகளும் உள்ளன. அந்த உதவிகளையும் மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடல் விரால் வளர்ப்பு

மேலும், சிப்பிகுளம் பகுதியில் சோதனை அடிப்படையில் கூண்டில் கடல் விரால் மீன் வளர்க்கும் திட்டமும் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மீனவர் கூண்டில் 1,500 கடல் விரால் மீன்களை வளர்த்து வருகிறார். தற்போது அவை 300 கிராம் எடை வரை வந்துள்ளன. 7 மாதங்கள் வளர்த்தால் அவை 3 கிலோ எடை வரை வளரும். கடல் விரால் மீன்களும் இந்த பகுதியில் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. இந்த திட்டங்கள் இப்பகுதி மீனவர்களுக்கு நல்ல மாற்றுத் தொழிலாக அமையும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x