Last Updated : 03 Dec, 2015 07:43 PM

 

Published : 03 Dec 2015 07:43 PM
Last Updated : 03 Dec 2015 07:43 PM

மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் உதவி கோரிய புதுச்சேரி அரசு

மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் உதவியை புதுச்சேரி அரசு கோரியுள்ளது. இடைக்கால நிவாரணத்தொகை விரைவில் கிடைத்து விடும் என்று நம்புவதாக தலைமைச்செயலர் மனோஜ்குமார் பரிதா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் மனோஜ்குமார் பரிதா கூறியதாவது:

''காரைக்காலில் இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துளளது. புதுவையில் இருந்து 150 கி.மீ தொலைவில் காரைக்கால் உளளதால், அங்கு பேரிடர் நிலைமையை சமாளிக்க ஒரு ஹெலிகாப்டர் தேவை. இந்திய விமானப்படையிடம் ஹெலிகாப்டர் உதவி கேட்டிருக்கிறோம்.

தேவையான உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள், தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒன்று காரைக்காலுக்கு விரைந்துள்ளது. படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

புதுவையில் 86,000 உணவுப் பொட்டலங்கள் தேவையானவர்களுக்கு தரப்பட்டன. துணைநிலை ஆளுநரும், முதல்வரும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

நிவாரணத் தொகையாக ரூ.182.45 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மத்திய குழு வந்து ஆய்வு செய்த நிலையில் தொடர் மழையால் தற்போது கூடுதல் சேதம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 450 வீடுகள் சேதமடைந்துள்ளன. 7000 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த துணை அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதுவையில் குறுகிய காலத்தில் 132 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு நிலைமை சிக்கலாக உள்ளது. புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுவையில் 173 நிவாரண முகாம்களில் 6,500 பேரும், காரைக்காலில 66 முகாம்களில் 3,500 பேரும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவு, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. 19 நடமாடும் சுகாதார குழுக்கள் மழை பாதித்த பகுதிகளில் இயங்கி வருகின்றன.

புதுவை அரசு கோரியுள்ள இடைக்கால நிவாரணம் ரூ.100 கோடி நாளைக்குள் கிடைத்து விடும் என நம்புகிறோம். வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத் தொகை அரசால் செலுத்தப்படும்'' என்று மனோஜ் பரிதா குறிப்பிட்டார்.

போதிய பொருட்கள் கைவசம்

புதுச்சேரியில் போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக வருவாய்துறை செயலர் கந்தவேலு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்களை நாடலாம். போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தேசிய பேரிடர் குழு காரைக்காலுக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x