Published : 06 Jun 2021 08:03 PM
Last Updated : 06 Jun 2021 08:03 PM
கோவையில் மின்தடை, மின்பழுது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை கோவை மாநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கொ.குப்புராணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூன் 06) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"கோவை மாநகர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சாதாரண நாட்களிலும், பருவ மழை காலங்களிலும் மின்தடை, மின்பழுது குறித்து புகார் தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய புகார்களை 9442111912 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
மழைக்காலங்களில் மின்விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள், கிளைகளை வெட்டும்போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து மின்தடை செய்த பின்னரே வெட்ட வேண்டும்.
வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே, உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து பிரதான சுவிட்சை அணைத்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை காயவைக்கக்கூடாது.
இடி, மின்னலின்போது தஞ்சம் அடைய மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், விளக்குகள் போன்றவற்றை தொடக்கூடாது. மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்ட வேண்டாம். சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT