Published : 01 Jun 2014 10:50 AM
Last Updated : 01 Jun 2014 10:50 AM

சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை

எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவ சேவைக்காக ஓடோடி வந்து உதவுகின்றனர். சஞ்சய்குமாரின் சேவை சற்றே வித்தியாசமானது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். எப்படி? விவரிக்கிறார் வேணுகோபால்..

11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை

சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக் கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

8 விருதுகள் பெற்ற சஞ்சய்

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

210 பேருக்கு உதவி

யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன்.

டீச்சர் தரும் டியூஷன் ஃபீஸ்

இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்!

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார். வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x