Published : 06 Jun 2021 01:37 PM
Last Updated : 06 Jun 2021 01:37 PM
பதவி எங்களுக்கு முக்கியமல்ல, பாஜக விட்டுக்கொடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்று, புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதேபோல், துணை முதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால், இருகட்சி தரப்பிலும் அமைச்சரவையை முடிவு செய்வதில் பிரச்சினை நீடித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூட்டாக கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 06) கூறியதாவது:
"பாஜகவினர் கரோனா காலத்தில் அதிகளவு மக்கள் பணியாற்றி தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தற்போது எம்எல்ஏ அசோக் பாபுவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணி புதுச்சேரி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஓரணியில் இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்கான அறிவிப்புகளை முதல்வர் அறிவிப்பார்" என்றனர்.
அமைச்சரவையில் பாஜக எத்தனை இடம் பெறுகிறது என்று கேட்டதற்கு, "அமைச்சரவையில் எவ்வளவு இடம் என்பது முக்கியமல்ல. எங்களுக்கு பதவி முக்கியமல்ல, அது இரண்டாம்பட்சம்தான். புதுச்சேரி வளர்ச்சிக்காக பாஜக விட்டுக்கொடுத்து, அனைத்து வகையிலும் முதல்வரோடு அமர்ந்து பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
கூட்டணி இருந்தால் விட்டுக்கொடுத்து செயல்படுவதுதான் தர்மம். பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனைத்து வகையிலும் செயல்பட்டு மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம்" என்றனர்.
உங்களின் முக்கிய கோரிக்கையான துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, "துணை முதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுத்து, முதல்வர் அறிவிப்பார்" என்று தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கரோனா நிவாரணம் தாமதமாகிறதே என்று கேட்டதற்கு, "கரோனா நிவாரணம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நிதி மேலாண்மை, அரசாணை பிறப்பித்தால், ஒப்புதல் என பல விசயங்கள் உள்ளன. இதை நிர்வாக தாமதம் என சொல்ல முடியாது. தற்போது பேரிடர் பிரச்சினை நிலவுகிறது. வேறு ஒன்றில் இருந்து நிதி எடுத்து ஒதுக்கீடு செய்து தரவேண்டியுள்ளது" என்றனர்.
தேர்தலில் வென்று 30 நாட்களுக்கு மேலாகியும் பல விசயங்களில் தாமதத்ததால் மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறதே என்று கேள்விக்கு, "முதல்வருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. விரைவாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலைமை மாறும்" என்று பதில் தந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...