Published : 08 Jun 2014 01:00 PM
Last Updated : 08 Jun 2014 01:00 PM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் சிக்கல்: குறைபாடு இருப்பதால் எம்சிஐ தயக்கம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு சுமார் 900 இடங்கள் கிடைக்கிறது. இதே போல சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் 2014-2015-ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 18-ம் தேதி கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு செய்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களையும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 85 இடங்களையும் ஒதுக்கினர். இதன் மூலம் இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் தலா 250 ஆக உயர்ந்தது. மேலும் 100 இடங்களுடன் புதிதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் எம்சிஐ அனுமதி அளித்தது. இவ்வாறு கூடுதல் இடங்கள் அதிகரித்த கல்லூரிகளிலும், புதிய கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதை எம்சிஐ குழுவினர் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு எம்சிஐ குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதியில் சிறிது குறைபாடு இருப்பதாக தெரிவித்தனர். அந்த குறைபாடுகள் சரி செய்யப்பட் டதற்கான அறிக்கை எம்சிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்சிஐ குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். அதனால், எவ்வித பிரச்சினையும் இல்லை. 200 எம்பிபிஎஸ் இடங்களும் கட்டாயம் கிடைத்துவிடும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கவுன்சலிங் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். மொத்தம் 4 கட்டங்களாக கவுன்சலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x