Published : 06 Jun 2021 03:14 AM
Last Updated : 06 Jun 2021 03:14 AM
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக முதற்கட்ட ஆய்வு பணியை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று தொடங்கினர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்திப் பெற்றது. தீபத் திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு 7-ம் நாளில் மகா தேரோட்டம் நடைபெறும். ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வரும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நான்கு திசைகளிலும் உள்ள மாட வீதியில் தார்ச்சாலை அமைக்கப்படும். சாலையில் ஏற்படும் திடீர் அழுத்தம், சாலை யோரத்தில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் சாலையை கடக்கும் மின் வயர்களால், பஞ்ச ரதங்களை எளிதாக நகர்த்திவிட முடியாது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகே, நிலையை பஞ்சரதங்கள் வந்தடையும்.
இதற்கிடையில், தி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைத்து, புதைவிட மின் கம்பி திட்டமும் செயல்படுத்தப்படும் என தி.மலை தேரடி வீதியில் கடந்த மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதற்கு, உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதன்மூலம், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தேரோட்டம் எளிதாக நடைபெற லாம் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வு பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று தொடங்கி உள்ளனர். இந்த பணி மேலும் ஓரிரு நாட்கள் தொடரும் என தெரிகிறது. சாலையின் அகலம், நீளம், சாலையின் கீழே சிறு பாலங்கள் மற்றும் நீரோடைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், சாலையின் இருபுறங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலையின் கீழ் பகுதியில் கழிவுநீர் கடந்து செல்லும் வழித்தடம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல், சாலையில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படுகிறது.
ஆய்வு பணி முடிந்த பிறகு, வரைபடம் வடிவமைக்கப்பட்டு, திட்டத்தின் மதிப்பு கணக்கிடப்படும் என்றும், அதன்பின்னர் கருத்துரு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ஆய்வு பணி நிறைவுப் பெற்றதும், எந்த வகையான சாலை அமைப்பது என இறுதி செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT