Published : 05 Jun 2021 06:47 PM
Last Updated : 05 Jun 2021 06:47 PM
வேலூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக, கரோனா ஊரடங்கு காலத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் குடும்பத்தினர்களிடம் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மாவட்டங்களில் இ- சேவை மையங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய்த் துறை தொடர்பான சான்றிதழ்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, கரோனா தொற்றுக் காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு மற்றும் இறப்புச் சான்றிதழை வருவாய்த் துறையினர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி அந்த இடத்திலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை இயற்கையான முறையில் இறந்தவர்கள், விபத்து மற்றும் கரோனா தொற்றால் இறந்தவர்கள் என மொத்தம் 3,358 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை நேரில் சென்று வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
வேலூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தில் சான்றிதழ் வழங்கும் பணியை வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் கணேஷ் இன்று (ஜூன் 5) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ''வருவாய்த்துறை வசம் உள்ள பட்டியலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல வட்டாட்சியர், வட்டாட்சியர், இ-சேவை மையப் பணியாளர் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, சான்றிதழ் வழங்க, அங்கேயே அனைத்து அலுவலர்களும் கையெழுத்திடுவார்கள்.
மேலும், இறந்த நபரின் ஆதார் எண்ணைப் பெற்று அதை ஆன்லைன் வழியாகப் பதிவேற்றம் செய்து இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் உடனடியாக பிரிண்ட் எடுத்து வழங்கப்படும். இதில், வேலூர் வட்டத்தில் மட்டும் 1,283 பேருக்குச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு வட்டத்திலும் இந்த நடைமுறை அமலில் இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் பணியை முன்னோடி திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT