Published : 12 Jun 2014 08:30 AM
Last Updated : 12 Jun 2014 08:30 AM
தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழக மக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என உலகம் முழுவதும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்தியாவிலும் தூக்கு தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தூக்கு தண்டனை தொடர்பான புதிய முடிவுகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகளை மத்திய சட்ட ஆணையம் வரவேற்றுள்ளது. http://www.lawcommissionofindia.nic.in/views/views.htm என்ற இணைய தொடர்பில் சுமார் 16 கேள்விகளை சட்ட ஆணையம் எழுப்பி, ஒரு மாதத்துக்குள் கருத்துகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, திமுக கலை, இலக்கிய பாசறை தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி, தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது:
தூக்கு தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நேரம் இது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையக் கூடிய வாய்ப்பு இல்லை என்பதை பல ஆராய்ச்சிகள் தெளிவாக்கியுள்ளன. இந்த நாட்டில் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் செல்வாக்கு உள்ளவர்கள் தப்பித்துக் கொள்வதும் புதியதல்ல.
இந்நிலையில், தவறு செய்யாதவர்கள் மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால் உயிருக்கு மாற்று ஏது? 140 நாடுகளுக்கு மேல் மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில், இந்தியாவும் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. மத்திய சட்டக் கமிஷன் இப்போது 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என்று சில கேள்விகளை நம் முன் வைத்திருக்கிறது. இந்தக் கேள்விகளை பதிவிறக்கம் செய்து, நீங்கள் உங்கள் கருத்துக்களை அனுப்ப முடியும். இதை உங்கள் நண்பர்களிடம் தயவுகூர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் தமிழகத்தின் குரல் ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT