Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
கரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு பஞ்சாப் மாநில அரசே விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. இதனிடையே கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் பஞ்சாப் அரசுக்கு 1.40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 400 ரூபாய்க்கு வாங்கிய கோவாக்சின் தடுப்பூசிகளை 20 தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ.1,000 என்ற விலையில் விற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சில இடங்களில் ரூ.1,060-க்கும், சில இடங்களில் ரூ.1,560-க்கும் பஞ்சாப் அரசு விற்றதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அகாலி தள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலும் புகார் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் சித்து கூறும்போது, “இந்த புகார் தொடர்பாக எனக்கும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசிகள் மீது எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. நாங்கள் பரிசோதனை, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்தல் போன்றவற்றை செய்து வருகிறோம். இந்த விஷயத்தில் நான் நேரடியாக களமிறங்கி விசாரணை நடத்தவுள்ளேன்” என்றார்.- பிடிஐ
கொடுத்த தடுப்பூசிகள் உடனடி வாபஸ்
தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விற்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தடுப்பூசிகளை வாபஸ் பெறுவதாக பஞ்சாப் மாநில அரசு நேற்று மாலையே உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் பஞ்சாப் மாநில அரசு கூறியுள்ளதாவது: தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு சார்பில் வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை வாபஸ் பெறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது கைவசம் இருப்பு உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் மாநில அரசிடம் உடனடியாக திரும்ப அளிக்கவேண்டும்.
இதற்காக தனியார் மருத்துவமனைகள், அரசுக்குக் கொடுத்த தொகை திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT