Published : 15 Dec 2015 08:55 AM
Last Updated : 15 Dec 2015 08:55 AM
கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள் மாநிலம் முழுவதும் உண்டியல் குலுக்கி தமிழக வெள்ள நிவார ணத்துக்கு ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடி நிதி வசூலித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாற்றில் புதிதாக அணை கட்டியே தீருவோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறுதியிட்டுச் சொன்ன அதேநேரத்தில் ‘தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவிடுவதற்காக மார்க் சிஸ்ட் தோழர்கள் மாநிலம் முழு வதும் உண்டியல் ஏந்தி வருவார்கள். அண்டை மாநில மக்களின் துயர் துடைக்கும் வகையில் பொது மக்கள் தாராளமாக நிதியுதவி அளித்திட வேண்டுகிறோம்’ என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி ஒரு நாள் மட்டும் தமிழக வெள்ள நிவாரணத்துக்காக கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் தோழர்கள் உண்டியல் ஏந்தினார்கள். இப்படி ஒரே நாளில் நடத்தப்பட்ட வசூலில் ரூ.2 கோடியே 6 லட்சத்து 36 ஆயிரத்து 243 ரூபாய் நிதி சேர்ந்திருக்கிறது.
வெள்ள நிவாரண நிதி திரட்டல் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வும் கட்சியின் இடுக்கி மாவட்டக் குழு உறுப்பினருமான ராஜேந்திரன், “பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது மாநிலக் கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவு. இதில் அரசியல், இனம், மொழி எதுவும் பார்க்கக் கூடாது என்பதும் நாங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானம்.
அதன்படி, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பினராயி விஜயன், கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றவர்களும் தமிழக மக்களின் துயர்துடைக்க கேரள மக்களிடம் ஒரு நாள் மட்டும் உண்டியல் ஏந்தினார்கள். இதில் சுமார் ரூ.2 கோடி வசூலானது.
பாஜகவும் வசூல்
பொதுவாக, நிதி திரட்டலில் வசூலான தொகையை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. ஆனால், கொடையளித்த மக்க ளுக்கு நன்றி சொல்லவும் அவர் களை ஊக்கப்படுத்தவும் மற்றவர் களையும் கொடையளிக்கத் தூண் டும் விதமாகவும் வசூலான தொகையை நாங்கள் இம்முறை வெளிப்படையாக அறிவித்திருக் கிறோம்” என்று சொன்னார். இதே போல், கேரள மாநில பாஜக-வும் தமிழக வெள்ள நிவாரணத்துக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT