Last Updated : 04 Jun, 2021 09:39 PM

 

Published : 04 Jun 2021 09:39 PM
Last Updated : 04 Jun 2021 09:39 PM

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய பாஜக - என்.ஆர்.காங்கிரஸ்: நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்னும் பதவியேற்க முடியாத ஒரு பரிதாப நிலையை பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஏற்படுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 4) கூறியதாவது, ‘‘மத்திய அரசு தடுப்பூசி கொள்முதல் கொள்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் தடுப்பூசி இல்லாமல் அவதிப்படுகின்ற நேரத்தில் பல நாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசிகளை மோடி அரசு அனுப்பியது. இது நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும். தடுப்பூசி தயாரிக்க தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

இந்தியாவில் இதுவரை 21.31 கோடி பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், 130 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதே நிலையில் சென்றால் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் ஆகும். அதற்குள் பல கோடி மக்கள் உயிரிழந்து விடுவார்கள்.

ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் தடுப்பூசி தரத் தயாராக உள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தன்னுடைய குழப்பமான முடிவால் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தடைபட்டுள்ளது.

எனவே, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டு காப்பாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நாங்கள் ஆளுநரை காணொளி காட்சி மூலம் சந்தித்து மனுவை அளித்தோம். அந்த மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக அவரும் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தாக்கம் குறைந்துவிட்டது என்று மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்.

இப்போது 3வது அலை வரத் தயாராக உள்ளது. இதில் 4 வயது முதல் 17 வயது பிள்ளைகள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞான வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் அதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குழந்தைகளை தாக்கினால் அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள். எனவே குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும். குறிப்பாக புதுச்சேரியில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைக்க வேண்டும்.

13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் எளிதான விஷயம். புதுச்சேரியை கரோனா இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தேவைப்படுகின்ற தடுப்பூசிகளை தர வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

முதல்வர் ரங்கசாமி அறிவித்த கரோனா நிவாரணம் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை அமைக்க முடியவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது அரசியல் கட்சி விவகாரம். அதை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவியேற்க முடியாத ஒரு பரிதாப நிலையை பாஜக-என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ளது என்பது வேதனையை தருகிறது. ஜனநாயகத்தை இவர்கள் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x