Last Updated : 04 Jun, 2021 09:26 PM

1  

Published : 04 Jun 2021 09:26 PM
Last Updated : 04 Jun 2021 09:26 PM

தமிழகத்தின் முதல் யுனானி கரோனா சிகிச்சை மையம் வாணியம்பாடியில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

படவிளக்கம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.

திருப்பத்தூர் 

தமிழகத்திலேயே முதன் முறையாக யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் வாணியம்பாடியில் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், காலி படுக்கைகள், ஆக்கிஜன் கையிருப்பு, சித்த மருத்துவ முறை, நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

முன்னதாக மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார மையம், ஆம்பூர் வர்த்தக மையம், வாணியம்பாடி,நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 400படுக்கைகள் மற்றும் வாணியம்பாடியில் யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

‘தமிழகத்தில் கரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பும். கரோனா பரிசோதனை அதிமுக ஆட்சிக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 61 ஆயிரமாக இருந்தது. தற்போது நாள் தோறும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 700 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகதத்தில் 37 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் கரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் விரைவாக ஆய்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பம்பரம் போல் சுழன்று பணியாற்றுகிறார். எங்களையும் அதேபோல் பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் 52 சித்தா சிகிச்சை மையங்கள் கரோனாவுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலேயே முதல் முறையாக வாணியம்பாடியில் யுனானி முறையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய சிகிச்சை மையம் இன்றுதொடங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் கூடுதலாக பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் 4 நாட்கள் கழித்து வழங்குப்படுகிறது. அதை விரைவாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர்ராஜூ, முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களே எங்களது செயல்பாட்டை பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாட்டை பாராட்டி வருகின்றனர்’’. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் எம்பி கதிர்ஆனந்த், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி. டாக்டர்.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், திமுக எம்எல்ஏக்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்)தேவராஜ் (ஜோலார்பேட்டை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x