Published : 04 Jun 2021 08:15 PM
Last Updated : 04 Jun 2021 08:15 PM
கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழி சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இந்திய அளவில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இதற்கிடையில், ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் (cowin) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மொபைல்போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற செயலியாகவும் கிடைக்கிறது. இந்த கோவின் இணையம் மற்றும் செயலியில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது.
தற்போது, பிற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, மதுரை மக்களவை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலை உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத் துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் வலியுறுத்தினார்.
அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாகப் பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT