Published : 04 Jun 2021 08:04 PM
Last Updated : 04 Jun 2021 08:04 PM

சென்னையில் வெளியே நடமாடிய கரோனா தொற்றாளர்களிடமிருந்து ரூ.58,000 அபராதம் வசூலிப்பு

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே நடமாடிய 29 நபர்களிடமிருந்து ரூ.58,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முன்கள தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து முதன்முறை ரூ.2,000 அபராதம் வசூலிக்கவும், அதனையும்மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கரேனா பாதுகாப்பு மையத்தில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புகார்கள் இருப்பின், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 044-25384520 தொலைப்பேசி வாயிலாக புகாராக தெரிவிக்கும்படி 18.5.2021 அன்று செய்தி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, இதுவரை பெறப்பட்ட 120 புகார்கள் மீது வருவாய்துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 புகார்களில் விதி மீறல் இல்லை எனவும், நான்கு நோயாளிகள் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 29 நபர்களிடமிருந்து தலா ரூ.2,000 வீதம் ரூ.58,000 அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனிவரும் நாட்களில் வெளியே வரக்கூடாது மீறினால் கரோனா பாதுகாப்பு மையத்திற்கு (COVID CARE CENTRE) அழைத்துச் செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பாதித்த நபரோ அல்லது அவரோடு தொடர்பில் இருந்த நபர்களோ வெளியில் நடமாடும் போது பிறருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தங்களது முழுஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x