Published : 04 Jun 2021 07:01 PM
Last Updated : 04 Jun 2021 07:01 PM
திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மையங்களில் 2-வது நாளாக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள் உட்பட 80-க்கும் அதிகமான இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு அதிகமானோர் ஆகியோரைத் தொடர்ந்து 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 3,52,862 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தும் மையங்களும் குறைக்கப்பட்டன. குறிப்பாக, மே 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
இதனிடையே, ஜூன் 2-ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு 18,000 கரோனா தடுப்பூசிகள் வரப் பெற்றதையடுத்து, அன்றே கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதையடுத்து மே 2-ம் தேதி 3,652 பேருக்கும், நேற்று 13,701 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து, இன்றும் கரோனா தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், தடுப்பூசி இருக்கும்போதே செலுத்திக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு அதிக அளவில் வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி கலையரங்க மண்டபம், தேவர் ஹால், மணப்பாறையில் இரு இடங்கள், இஆர் மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், தென்னூர் பள்ளிவாசல், நாகமங்கலம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, சஞ்சீவி நகர், என்ஐடி உள்ளிட்ட இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT