Published : 04 Jun 2021 06:46 PM
Last Updated : 04 Jun 2021 06:46 PM
புதுச்சேரியில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கருப்புப் பூஞ்சை நோய்க்குத் தலா 10 படுக்கைகளுடன் பிரத்யேக வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 4) வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று தற்போது வேகமாகக் குறைந்து வருகிறது. அதற்கு ஊரடங்கு மற்றும் மக்கள் ஒத்துழைப்பு அளித்து முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதாகும். புதுச்சேரியில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் படுக்கைகள் உள்ளிட்டவை மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி கிடைத்து வருகிறது. எனவே ஊடங்கு இன்னும் 5 அல்லது 6 நாட்களுக்குத் தொடரலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் எடுத்துரைத்துள்ளோம்.
கருப்புப் பூஞ்சை அதிகமாகப் பரவி வருகிறது. இதற்காக கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் தலா 10 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கருப்புப் பூஞ்சை நோய்க்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவம் பார்க்க காது, மூக்கு, தொண்டை, கண், பல், அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுடன் கூடிய மருத்துவ வல்லுநர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் லைபோசோமல் அம்போடெரிசின்-பி என்ற முக்கிய மருந்தை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு இதுவரை 340 மருந்துக் குப்பிகள் வழங்கியுள்ளது. மேலும் 15 ஆயிரம் குப்பிகள் வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். ஆகவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
குழந்தைகளுக்கு கரோனா அதிகமாகப் பரவி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. புதுச்சேரியில் இதுவரை அப்படி ஒன்றும் நிகழவில்லை. அப்படியே குழந்தைகளுக்கு அதிக தொற்று ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாக்க பிரத்யேக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு சிறப்புக் குழுவை உருவாக்கி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வென்டிலேட்டர்களுடன் 50 படுக்கை வசதிகளை உருவாக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் தலா 5 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதிகளுடன் உருவாக்குவதற்கான ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன.
தனியார் பரிசோதனை மையங்களில் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ.200ம், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ரூ.500ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அதிக பணம் வசூலிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரூனெட் பரிசோதனைக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்காததால் அந்தப் பரிசோதனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கரோனா 3-வது அலை வருவதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் 3-வது அலை தொடங்கி விட்டதாகவும் சில தகவல்கள் வருகின்றன. இந்த 3-வது அலையைத் தவிர்க்க வேண்டும், பொது முடக்கத்தைத் தவிர்க்க வேண்டும், வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்று நினைத்தால் நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இன்று வரை புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கிறது. ஆனால், முன்பதிவு செய்துவிட்டு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்கிறோம். இதில் சில தளர்வுகளை எதிர்பார்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். ஆகையால், இன்னும் ஒருசில நாட்களில் யார் விருப்பப்பட்டு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு வரலாம். எனவே, அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அத்தியாவசியமானது. பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சிறியவர்களுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
அடிக்கடி வியர்வையோடு முகக்கவசத்தைக் கழட்டிவிட்டு 2, 3 நாட்கள் கழித்து அதே முகக்கவசத்தை அணிந்தால் அதன் மூலம் பூஞ்சை நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’’
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT