Published : 04 Jun 2021 06:15 PM
Last Updated : 04 Jun 2021 06:15 PM
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்கியதில், திருச்சி மண்டலத்தில் 143 பேர் பயன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2020, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்கும் பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 2-ம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தார். மாநிலம் முழுவதும் 2,457 பேருக்கு மொத்தம் ரூ.497.31 கோடி அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கிய ஓய்வூதிய பணப் பலன்களை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலத்தில் மொத்தம் 143 பேர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.31 கோடி அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களது பிற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக டிஎன்எஸ்டிசி ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் நலச் சங்க செயலாளர் கே.மருதமுத்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2020, ஏப்ரலுக்குப் பிறகு உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை விரைவில் வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது.
இவற்றுடன் எங்களது நீண்ட கால கோரிக்கையான அகவிலைப் படியை 2016, ஜனவரி முதல் 148 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். 1992-ல் அமல்படுத்தி, தொழிற்சங்கத்துடன் ஆலோசிக்காமல் 2016-ல் நிறுத்தப்பட்ட சேம நல நிதியை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்".
இவ்வாறு மருதமுத்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT