Published : 04 Jun 2021 05:59 PM
Last Updated : 04 Jun 2021 05:59 PM
கோவையில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காத தனியார் மருத்துவமனையில், புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்கத் தற்காலிகத் தடை விதித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ஷாஜகான் (63) கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கரோனா அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி மே 20-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாகக் கேட்டுள்ளனர். காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது மருத்துவனை தரப்பில் முன்னதாகவே ரூ.15 லட்சம் கோரப்பட்ட தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில், ரூ.11.55 லட்சம் எனக் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிகக் கட்டணம் நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்தக் குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.
விசாரணை அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜா (பொறுப்பு) பிறப்பித்துள்ள உத்தரவில், "கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்ததாகப் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு அந்த மருத்துவமனை ஒத்துழைக்கவில்லை. கேட்கப்பட்ட வரவு, செலவுக் கணக்குகள், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
எனவே, விசாரணை முடிவடையும் வரை புதிதாக எந்த கரோனா நோயாளிகளையும் மருத்துவமனை அனுமதிக்கக் கூடாது. தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கோவையில் மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர். இதன் முடிவும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT