Published : 04 Jun 2021 03:56 PM
Last Updated : 04 Jun 2021 03:56 PM
ஆம்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 7 டன் மாங்காய்கள் சாலையில் சிதறின. அதைப் பொதுமக்கள் வீடுகளுக்கு அள்ளிச்சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியைச் சேர்ந்தவர் மாங்காய் வியாபாரி விஜயன் (47). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம், சித்தூர், குப்பம் போன்ற பகுதிகளுக்கு மாங்காய் லோடுகளை வியாபாரத்துக்காக அனுப்பி வருகிறார்.
அதன்படி, திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூருக்கு 7 டன் எடை கொண்ட மாங்காய் லோடு ஏற்றிய லாரி ஒன்று இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டது. லாரியைத் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சிவாஜி (43) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதிக்கு அதிகாலை 5.35 மணிக்கு லாரி வந்தபோது அங்கு கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்றிருந்தது. இதைச் சற்றும் கவனிக்காத ஓட்டுநர் சிவாஜி, கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாகத் தான் ஓட்டி வந்த லாரியுடன் மோதினார். இதில், லாரியின் முன்பக்கம் முழுமையாகச் சேதமடைந்தது. லாரியில் இருந்த 7 டன் மாங்காய்களும் சாலையில் சிதறி உருண்டோடின. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் ஓட்டுநர் சிவாஜிக்குக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவல் வந்ததும் ஆம்பூர் கிராமியக் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்த வழியாகச் சென்றவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து லாரியிலிருந்து சிதறிய மாங்காய்களைத் தங்களது வீடுகளுக்குக் கூடைகளிலும், பைகளிலும் வாரிச்சென்றனர்.
இதையடுத்து, அங்கு வந்த தாலுகா போலீஸார் விபத்தில் காயமடைந்த சிவாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT