Published : 04 Jun 2021 03:16 PM
Last Updated : 04 Jun 2021 03:16 PM

சசிகலா அதிமுகவில் இல்லை: கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

''தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பது புரிகிறது. விரைவில் நிர்வாகிகளைச் சந்திப்பேன். கட்சியை மீட்டெடுக்கலாம்'' என, சசிகலா பேசியதாக, கடந்த சில நாட்களாக ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 04) எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, சென்னையில் புதிய இல்லத்திற்கு இன்று குடிபுகுவதால் ஓபிஎஸ் அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி, எதிர்க்கட்சியாக எப்படிச் செயல்படுவது, சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஈபிஎஸ் பதிலளித்தார்.

சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசியதாக ஆடியோ வெளிவருகிறதே?

சசிகலா அதிமுகவில் இல்லை. தேர்தலின்போதே சசிகலா ஊடகத்திற்கு செய்தி வெளியிட்டார். அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டேன் எனக் கூறினார். எனவே, அரசியலுக்கு வருவது குறித்து அவர் கருத்து சொல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படியே பேசியிருந்தாலும் அமமுக தொண்டர்களிடம் பேசியிருப்பார். அதிமுக தொண்டர்களிடம் பேசியிருப்பதற்கு வாய்ப்பில்லை. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு ஆடியோ வெளியிட்டுள்ளனர்.

அதிமுக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறது. இது, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி. அது ஒருபோதும் நடக்காது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அதிமுகவில் இல்லை. அதுதான் தொடரும். அவர்கள் இல்லாமல்தான் வெற்றி பெற்றிருக்கிறோம். அவராகவே விலகிவிட்டார், காரணம் தேவையில்லை.

அதிமுக கொறடா எப்போது அறிவிக்கப்படுவார்?

சரியான நேரத்தில் அதிமுக கொறடா அறிவிக்கப்படுவார்.

ஓபிஎஸ் ஏன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?

இன்று அவர் புது வீட்டுக்குச் செல்கின்றார். பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று நல்ல நேரம் என்பதால் நான் இங்கு வந்தேன். நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

நீங்களும் ஓபிஎஸ்ஸும் தனித்தனி அறிக்கைகள் வெளியிடுகிறீர்களே? உங்களுக்குள் பனிப்போர் நிலவுகிறதா?

அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நான் எதிர்க்கட்சித் தலைவர். நான் அரசு தொடர்பானவற்றுக்கு பதில் அளிக்கிறேன். பொதுவான பிரச்சினைகள் குறித்து அவர் பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியின்போது, பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பெயரில் அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அப்போது யாரும் பேசவில்லை. இப்போது இதனைப் பெரிதுபடுத்துகின்றனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

மத்திய அரசை ஒன்றிய அரசு என அறிவிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளதே?

இப்போது மத்திய, மாநில அரசு என்றே மக்கள் அழைக்கின்றனர். அப்படித்தான் இருக்கிறது. அதன்படிதான் செயல்பட முடியும். தனிப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

எதிர்க்கட்சியாக அதிமுக எதுவும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளதே?

என்ன குரல் கொடுக்க வேண்டும்? ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்கள்தான் ஆகிறது. பேசினால் இப்போதே விமர்சிக்கிறார்கள் என்பார்கள். கரோனா தொற்றைச் சேர்ந்து ஒழிக்க ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். ஒன்றாகப் பணிபுரிய வேண்டும். எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சி இல்லை. மக்கள் துன்பத்தில் இருக்கும்போது அரசியல் பேசுவது நியாயமில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x