Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
கரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரைச் சேர்ந்தவர் புத்தநேசன்(55). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்து உள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 8-ம் வகுப்பு படிக்கும் சுவாதியா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஆசிரியர் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெற்று, அதன் மூலம் கிடைக்கும் பணப்பலன்களை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து உள்ளார்.
இதையடுத்து, புத்தநேசன், தனது மனைவி, மகளுடன் நேற்று முன்தினம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் பிரவீன் பி. நாயரை சந்தித்து, ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், கல்வித் துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, ஆசிரியர் புத்தநேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாராட்டி, வாழ்த்து கூறினார்.
இதுகுறித்து ஆசிரியர் புத்தநேசன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கரோனா தொற்றால் தினம் தினம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் உயிரிழந்தும் வருவதால், அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமும் எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்பதற்காக பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெற்று, அதன் மூலம் கிடைக்கும் பணப்பலன்களை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என முடிவு செய்தேன். இதுகுறித்து நான் எனது மனைவி, மகளுடன் கலந்து ஆலோசித்தேன். அவர்களும் எனது முடிவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.
சுமார் ரூ.10 லட்சம்
அதன்படி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து விருப்பு ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை வழங்கினேன். அதன் மூலம் வரும் பணப்பலன்கள் (சுமார் ரூ.10 லட்சம்) முழுவதையும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவேன்.
கிடைக்கும் வருமானம் போதும்
நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சுமார் 5 வருடங்கள் உள்ளன. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு நான் பணியில் சேர்ந்ததால், ஓய்வூதியம் கிடைக்காது. ஏற்கெனவே நான் சரக்கு ஏற்றும் மினி வேன், வாடகை கார் வைத்துள்ளேன். போலீஸாருக்கு சீருடை துணிகளை விற்பனை செய்து வருகிறேன். மேலும் எனது சகோதரி மகன் மூலம் காய்கறி வியாபாரமும் செய்கிறேன். எனது மனைவி வீட்டிலிருந்தபடியே கவரிங் நகைகளை விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கும். எங்களுக்கு வேறு பெரிய செலவுகள் எதுவும் இல்லை என்பதால், கிடைக்கும் வருமானத்தை வைத்து சமாளித்துக் கொள்வோம் என்றார்.
பசியால் வாடுவோருக்கு ஒருவேளை உணவு அளிக்கக்கூட யோசிப்பவர்களுக்கிடையே, கரோனாவால் வாடும் மக்களின் துயர்துடைக்க ஆசிரியர் புத்தநேசன் எடுத்துள்ள முடிவு ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT