Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

தளர்வுகளற்ற முழு ஊரடங்குக்கு பின்னரும் நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

உதகை

தளர்வுகளற்ற முழு ஊரடங்குக்கு பின்னரும் நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் டில்லி சென்று திரும்பிய 9 பேருக்கு முதலில் கரோனா கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பல நாட்களாக தொடர்ந்து நீலகிரி மாவட்டம் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து வந்தது. பின்னர் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதும், மீண்டும் கரோனா பரவல் தொடங்கியது. இந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின், மீண்டும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மே 10-ம் தேதிக்கு பின்னர், நீலகிரி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மூன்று நாட்களாக இந்த எண்ணிக்கை 500-ஐ கடந்தது. நேற்று முன்தினம் 579-ஆக பதிவானது. இதற்கிடையே தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், குறைந்த அளவே கிடைப்பதால் தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் நிலவுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளி ஆட்கள் உள்ளே வராதவாறும், கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியே யாரும் செல்லாதவாறும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள வீரியமிக்க கரோனா தொற்று இரண்டாவது அலையில் முதியோர்கள் மட்டுமின்றி இளைஞர்கள், குழந்தைகள்கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவசியமில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசு குறிப்பிட்டுள்ள வயதுக்குட்பட்டவர்களில், இதுவரை செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாங்களாகவே முன்வர வேண்டும். நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (நேற்று) 7,000 கரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு இந்த வாரத்திலிருந்து தொடர்ந்து தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 11 கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, 4 அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்படின், கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். தற்போது வரை ஆக்சிஜன் பற்றாக்குறையோ, மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறையோ ஏற்படவில்லை. மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x