Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
கோவையின் முக்கிய வர்த்தக வீதிகளில் இரவு நேரங்களில் மளிகைப் பொருள் வாங்க சிறு வர்த்தகர்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இதனால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க, சிறு வியாபாரிகள், கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்திலேயே கரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில் 56 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். தொற்று தீவிரமாக இல்லாத நாட்களில் இங்கு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஊரடங்கு விதிகளை சரிவர அமல்படுத்தாததே தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க வாகனங்களில் காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனை மற்றும் ஆன்லைனில் இறைச்சி, முட்டை விற்பனை உள்ளிட்டவற்றுக்கு கோவைமாநகரில் அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. கோவையில் மளிகை மொத்த வியாபாரம் நடைபெறும் முக்கிய இடமான ரங்கே கவுடர் வீதியில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, கட்டுப்பாடுகளை பின்பற்றி வர்த்தகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறு மளிகை வியாபாரிகள் இங்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை. இதுதொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
“மொத்த வியாபார கடைகளுக்கு இரவில் வரும் சிறு வியாபாரிகளிடம் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்த வேண்டும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அவர்களை மொத்த வியாபாரிகள் வலியுறுத்த வேண்டும்.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், சிறு வியாபாரிகளால் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும்” என்கின்றனர் பொதுமக்கள்.
சங்கம் துணை நிற்காது
இதுகுறித்து, ரங்கே கவுடர் வீதியில் உள்ள மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரனிடம் கேட்டபோது, “எங்களுக்கும் குழந்தைகள், குடும்பம் உள்ளது. கரோனா தொற்று குறித்த அச்சமும், விழிப்புணர்வும் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதால், கடைகளை திறந்து வர்த்தகத்தில் ஈடுபடு கிறோம்.
பகல் நேரங்களில் கடைகளை திறந்தால் பொதுமக்கள் அதிகம் கூடிவிடுவார்கள் என்பதால், இரவு நேரத்தில் சில்லறை வியாபாரிகள் மட்டும் வந்து செல்லும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரவில் வாகனங்களை சாலையில் வரிசையாக நிறுத்தி சரக்குகளை ஏற்றுவதால் கூட்டம் அதிகமாக இருப்பதுபோல தெரியும். ஆனால் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.
கடைகளுக்கு வரும் வியாபாரிகளை முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும், சானிடைசர் வழங்க வேண்டும் என எங்களது சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளோம். கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உள்ளானால், சங்கம் துணை நிற்காது என்பதையும் தெரிவித்துள்ளோம். இதனை மீண்டும் அறிவுறுத்துவோம்” என்றார்.
மாநகராட்சி ஆணையர் பெ.குமார வேல் பாண்டியன் கூறும்போது, “அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இரவில் வர்த்தகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வீடியோவில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பது தெரிகிறது.
மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இருப்பினும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT