Published : 03 Jun 2021 08:10 PM
Last Updated : 03 Jun 2021 08:10 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்துள்ள 15 வயதுச் சிறுவன் வம்ஷிக், அதை ஏலத்தில் விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஓசூரைச் சேர்ந்த சிவா என்பவரின் 15 வயது மகன் வம்ஷிக். அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே வரைவதில் ஆர்வம் கொண்ட சிறுவன் வம்ஷிக், ஏராளமான ஓவியங்களைத் தொடர்ந்து வரைந்து வருகிறார்.
அண்மையில் அவர் வரைந்த 'மாஸ்டர்' விஜய் - விஜய்சேதுபதி ஓவியம், 'கர்ணன்' தனுஷ் ஓவியம், 'கைதி' கார்த்தி ஓவியம் உள்ளிட்டவை பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு சம்பந்தப்பட்டவர்களின் பாராட்டுகளையும் பெற்றன.
நீர் வண்ணத்தைக் (வாட்டர் கலர்) கொண்டு ஓவியம் வரையும் இவர், புது முயற்சியாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்தில் முதல்வராக அவர் கையெழுத்திட்ட (முதல்வரின் முதல் கையெழுத்து) புகைப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை இணையத்திலேயே ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை முதலமைச்சரின் கரோனா நிவாரணத்துக்கே அனுப்ப முடிவெடுத்துள்ளார். ஓவியத்தின் ஆரம்ப கட்ட விலையாக ரூ.33 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று (ஜூன் 3) தொடங்கும் ஏலம், ஜூன் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து தமிழ் இணையதளத்திடம் வம்ஷிக் கூறும்போது, ''அப்பா சிவா அடிப்படையில் ஒரு பொறியாளர். ஆனாலும் சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்டு, வரைந்து வந்தார். தற்போது பைரவி டிசைன் அண்ட் ஸ்கில் அகாடமி என்ற ஓவியப் பள்ளியை நடத்தி வருகிறார். சிறு வயதில் இருந்தே அங்கு சென்று பயிற்சி வகுப்புகளை கவனிப்பேன். அப்பா அவராக எதையும் கற்றுக்கொள்ள வலியுறுத்தியது இல்லை என்றாலும் எனக்கே ஓவியத்தில் ஆர்வம் வந்து மெதுவாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு நீர் வண்ண (வாட்டர் கலர்) ஓவிய முறையில் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கண்டறிந்த அப்பா, அதில் ஓவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக கரோனா ஊரடங்கு காலம் இன்னும் கூடுதலான சிறப்புப் பயிற்சிகளை பெற உதவியாக இருந்தது'' என்கிறார் வம்ஷிக்.
ஓவியங்கள் வரைவதில் அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், வாட்டர் கலர் எனப் பல முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த ஓவிய முறைகளில் நீர் வண்ணத்தைக் கொண்டே ஆயில் பெயிண்டிங் ஃபினிஷிங் முறையில் வம்ஷிக் வரைகிறார்.
அது கடினமானதாக இருந்தாலும் அதில்தான் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் தமிழக கிராமங்கள், அவற்றில் வாழும் மக்கள், இயற்கை எனப் பொதுவாக வரைந்து கொண்டிருந்த வம்ஷிக், மெல்ல மெல்ல மனித முகங்களை வரைய ஆரம்பித்தார். சமூக வலைத்தளங்களில் அதற்கான வீச்சு அதிகமாக இருந்தது.
அதையடுத்து சினிமா பிரபலங்களின் ஓவியங்களையும் வரைய ஆரம்பித்தார் சிறுவன் வம்ஷிக். தனுஷ், கார்த்தி உள்ளிட்ட திரை நாயகர்களின் ஓவியங்களையும் வரைந்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு புத்தர் ஓவியத்தை வரைந்து பரிசாக அளித்துள்ளார். 'காலா', 'கபாலி' உள்ளிட்ட படங்களின் கலை இயக்குனர் ராமலிங்கத்தின் புகைப்படத்தையும் வரைந்து அவருக்குப் பரிசாக அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் முதல் நாள் கையெழுத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசும் வம்ஷிக், ''ஆர்ட் ஆஃப் எஜூகேஷன் என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. அதில் நான் வரையும் ஓவியங்களை விற்று, அதில் கிடைக்கும் தொகையை ஏழை மாணவர்களுக்கு பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் கரோனாவை ஒழிக்கத் தமிழக அரசின் முயற்சிகளுக்கும் ஓவியம் வழியாக உறுதுணையாக இருக்க ஆசைப்பட்டேன். தமிழக முதல்வரின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து அந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்தேன். அந்த வகையில்தான் இந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டு உள்ளது'' என்று வம்ஷிக் தெரிவித்தார்.
ஓவியக் கைகள் அன்பையும் பரப்பட்டும்...
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT