Published : 03 Jun 2021 07:28 PM
Last Updated : 03 Jun 2021 07:28 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி இன்று தொடங்கியது. இங்கு தினமும் 400 மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆக்சிஜன்:
நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மறுநாளே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தொடர்ந்து 6 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
443 டன் உற்பத்தி:
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மே 19-ம் தேதி மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு முதலாவது அலகில் தொடர்ந்து திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகில் நேற்று வரை 442.90 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 417.38 டன் திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 33.87 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 29.64 டன் ஆக்சிஜன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2-வது அலகு:
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள 2-வது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அந்த அலகில் சோதனை ஓட்டம் கடந்த 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சோதனை ஓட்டம் சுமூகமாக நடைபெற்று வருகிறது. எனவே, 2-வது அலகில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அலகுகளிலும் சேர்த்து தினமும் சராசரியாக 70 டன் அளவுக்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
வாயு நிலை ஆக்சிஜன்:
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்திகான கட்டமைப்பு வசதி மட்டுமே இருந்தது. இதனால் இதுநாள் வரை திரவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகிறது. ஆனால் அதனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த 1 மாதமாக உற்பத்தியான 3,955 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் வீணாக காற்றில் கலந்துள்ளது. இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 260 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தியாகி காற்றில் கலந்துள்ளது.
சிலிண்டர் உற்பத்தி:
இந்நிலையில் வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிலிண்டர்களில் வாயி நிலையிலான ஆக்சிஜனை நிரப்பும் வசதியை (பாட்டிலிங் பிளான்ட்) ஏற்படுத்தினர். இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதையடுத்து மருத்துவ பயன்பாட்டுக்கான வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ரூ.11 கோடி செலவில் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் வசதி ( Oxygen Cylinder Bottling Plant) தொடங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை எங்கள் தொழில்நுட்பம் திரவ ஆக்சிஜன் உற்பத்தியை மையமாக கொண்டே இருந்தது. தற்போது காற்றில் வீணாக கலக்கும் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் தினமும் 400 மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும். நாட்டின் தேவைக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்வோம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT