Last Updated : 03 Jun, 2021 04:12 PM

 

Published : 03 Jun 2021 04:12 PM
Last Updated : 03 Jun 2021 04:12 PM

குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருக்கலாம்: அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்

லால்குடி வட்டம், புள்ளம்பாடி பரவன் ஓடை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அரசின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.

திருச்சி

மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருக்கலாம் என, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளைத் தூர்வாரும் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் அரியாறு வடிநிலக் கோட்டத்தில் 43 பணிகள் 97.70 கி.மீ. தொலைவுக்கு ரூ.3.85 கோடியிலும், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகள் 65.11 கி.மீ. தொலைவுக்கு ரூ.1.773 கோடியிலும் என, மொத்தம் 63 பணிகள் மொத்தம் 162.81 கி.மீ. தொலைவுக்கு ரூ.5.623 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில், அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனா இன்று (ஜூன் 03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டில் காட்டாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகள் ரூ.62.905 கோடியில் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன.

மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, அனைத்து தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை பொதுப்பணித் துறை அலுவலர்கள் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு நடத்தினேன்.

குறுவை சாகுபடிக்காக டெல்டா பகுதியில் 78 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரம் ஏக்கரில் பாய் நாற்றாங்கால் உற்பத்தி செய்து வைத்துள்ளனர். இதை 40 ஆயிரம் ஏக்கரில் நடவுள்ளனர்.

எனவே, நிகழாண்டில் மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கும் வகையில் பணிகள் வேகமாகவும், தரமானதாகவும் நடைபெற்று வருகின்றன. எனவே, குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருக்கலாம்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் தற்போது 91 அடிக்கு உள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் உள்ளதால், உரிய நேரத்தில் அணை திறக்கப்படும். தண்ணீர் திறக்கப்படுவதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும்.

தூர்வாரும் பணிகளில் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தினால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். முக்கொம்பு புதிய மேலணை கட்டுமானப் பணிகள் இன்னும் 4, 5 மாதங்களில் நிறைவடையும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, நடுக் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்லம், அரியாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் பி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, லால்குடி வட்டம் புள்ளம்பாடி கிராமத்தில் உள்ள பரவன் ஓடை தூர்வாரும் பணிகளை சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x