Published : 03 Jun 2021 01:56 PM
Last Updated : 03 Jun 2021 01:56 PM
அமைச்சர்கள், சபாநாயகர் பெயர்கள் அடங்கிய பட்டியலை முதல்வர் ரங்கசாமியிடம் தர பாஜக மேலிடத்தலைவர்கள் நாளை புதுச்சேரி வருகின்றனர். இந்நிலையில் காலில் காயத்துக்கான சிகிச்சையிலுள்ள பாஜக மேலிட பொறுப்பாளரை சந்தித்து இன்று ஆலோசிக்க மாநிலத்தலைவர்கள், எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.
இந்நிலையில் பாஜக மேலிட தலைவர்களோடு முதல்வர் ரங்கசாமி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையில் சமரச தீர்வு ஏற்பட்டது. பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்களை ஒதுக்கீடு செய்து தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இரு கட்சிகளும் புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பதவிகளை பெறுவதில் இரு கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பாஜகவில் யாருக்கு என்ன பதவி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தேசிய தலைமைக்கு அளித்துள்ளனர். அத்துடன் புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் சட்டப்பேரவைக் கட்சித்தலைவர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் திடீரென்று பெங்களூர் சென்றனர்.
இதுபற்றி விசாரித்தபோது, "புதுவை பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா காலில் ஏற்பட்ட காயத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து புதுச்சேரி தற்போதைய சூழல் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினோம்" என்று குறிப்பிட்டனர்.
மேலும் பாஜக தரப்பில் கூறுகையில், "பாஜக மேலிட தலைவர்கள் சி.டி.ரவி, ராஜூ சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் நாளை (ஜூன் 4) புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் பாஜக எம்எல்ஏக்களோடு ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசுகின்றனர். அப்போதுசபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர், பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியலையும் முதல்வர் ரங்கசாமியிடம் தருகின்றனர்" என்று குறிப்பிட்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "பாஜக தரப்பில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுபவர் பெயரை உறுதி செய்ததுடன், சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அமைச்சர்கள் பதவியேற்பு அமாவாசைக்கு பிறகு வரும் முகூர்த்த நாளான வரும் 14-ம் தேதி இருக்க வாய்ப்புள்ளது. முதல்வர் இதை முடிவு செய்வார்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT