Published : 03 Jun 2021 11:50 AM
Last Updated : 03 Jun 2021 11:50 AM
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 5 நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
50 ஆண்டு காலம் திமுக தலைவர், 5 முறை தமிழக முதல்வர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்.
இடஒதுக்கீடு மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய இடம் கிடைக்க வழி செய்தவர். மாநிலம் சார்ந்த உரிமைகளில் குரல் கொடுத்தவர். மத்தியில் கூட்டாட்சி அமைய பல முறை காரணமாக இருந்தவர். இயல், இசை, நாடகம் என அனைத்து தளங்களிலும் தடம் பதித்தவர். அரசியல் தவிர தமிழ் இலக்கியங்களில் கவனம் செலுத்தியவர். பல அரசியல் சார்ந்த நூல்கள், வரலாற்று நூல்கள் எழுதியவர்.
கலைஞர் கடிதம் எழுதி தொண்டர்களை வழி நடத்தியவர், 75 ஆண்டுகாலம் முரசொலி பத்திரிக்கையை நடத்திய பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவர் மறைவுக்குப்பின் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். மக்களவை, சட்டப்பேரவை இரண்டு தேர்தல்களிலும் திமுக வெற்றிப்பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை 6 வது முறையாக திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.
இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் கரோனா நிவாரணத் தொகை 2-வது தவணை, கரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவித் தொகை, கோயில் அர்சகர்கள்,பணியாளர்களுக்கு ரூ.4000/- உதவித் தொகை, குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 பொருட்கள் வழங்குவது, உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT