Published : 22 Dec 2015 11:10 AM
Last Updated : 22 Dec 2015 11:10 AM
இயற்கை சீரழிவு, நகரமயமாக்கலால் சிலந்தி இனம் அழிந்து வருவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எட்டுக்கால் பூச்சி என அழைக்கப்படும் சிலந்திகள் பூச்சி இனத்தை சேர்ந்தவை அல்ல. இவை ஆங்கிலத்தில் ஸ்பைடர் என்றும் இந்தியில் மக்கிடி எனவும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. சுமார் 350 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினம் இது. நோய் களை பரப்பும் கொசு, ஈ மற்றும் சிறு பூச்சிகளை உட்கொண்டு நோய் பரவாமல் தடுப்பதால் நோய் தடுப்பான் எனவும் அழைக்கப்படுகிறது. பல உயிரினங்களுக்கு உணவாகவும் இவை பயன்படுகின்றன. உலகிலுள்ள பல்லுயிர் பெருக்கத்தில் சிலந்திகள் முக்கிய பங்காற்றுகின்றன. உலகில் அண்டார்டிகாவைத் தவிர, பெரும்பாலான இடங்களில் சிலந்திகள் காணப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆற்றல், சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளங்கள் புலத் தலைவர் கி. முத்துச் செழியனிடம் சிலந்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சி மாணவி ரா. கார்த்திகேயனி கூறியதாவது: மகாராஷ்டிராவிலுள்ள பழங்குடியின மக்கள் சிலந்தி வலையுடன் வெல்லத்தைச் சேர்த்து விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். வடகிழக்கு இந்தியா மற்றும் கம்போடியா நாட்டில் டெராண்டுலா வகை சிலந்திகளை புரதச் சத்துள்ள உணவாக உட்கொள்கின்றனர். சிலந்தியின் நூலிழைகள் தொலைநோக்கி மற்றும் நுண்ணோக்கி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் வசிக் கும் மக்கள் வெட்டுக் காயத்துக்கு சிலந்தி வலையைப் பயன்படுத்துகின்றனர். ஒசாக்கி என்ற ஜப்பானிய ஆராய்ச்சியாளர் நெப்பிலா வகை சிலந்தியின் நூலிழைகள் மூலம் வயலின் நரம்புகளை உருவாக்கியுள்ளார்.
சிலந்தியின் விஷம் மூலம் இதயம், மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் நவீன அறிவியலில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. 2012-ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஹான் ஓவர் பல்கலைக்கழகத்தில் நெப்பிலா என்ற சிலந்தியின் நூலிழைகள் உதவியுடன், மனித நரம்புகளில் ஏற் படும் நோய்களை குணப்படுத்த லாம் எனக் கண்டறிந்துள்ளனர். சிலந்தியிலுள்ள புரதச் சத்தை மனிதர்கள் பயன்படுத்துவது குறித் தும், உலகெங்கிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இயற்கைச் சீரழிவு, நகரமயமாக்கல், பூச்சிக்கொல்லி, ரசாயனம், சுற்றுப்புறச் சீர்கேடு, காட்டுத்தீ என பல்வேறு காரணி களால் சிலந்தி இனங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றன. பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் சிலந்தி களின் பல்வகைமை உலகளவில் விலங்குகளின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
உலகளவில் சுமார் 44,906 சிற்றின வகைகளைச் சேர்ந்த சிலந்திகள் உள்ளதாக அமெரிக் காவை சேர்ந்த பிளாட்னிக் என்ற சிலந்தி ஆராய்ச்சியாளர் 2014-ம் ஆண்டு தெரிவித்தார். இந்தி யாவை பொறுத்தவரையில் 438 குடும்பங்களை சேர்ந்த 438 பேரினம் மற்றும் 1,685 சிற் றின சிலந்திகள் உள்ளதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேசுவாணி என்ற ஆராய்ச்சியாளர் 2012-ம் ஆண்டில் தெரிவித்தார். அரக்ரோனேட்டா அக்வாட்டிகா என்ற நீர்வாழ் சிலந்தியானது மீனை உட்கொண்டு வாழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் உருண்டை வலை சிலந்திகள், தூரிகை கால்களையுடைய அடி நிலப்புழைக் கதவு சிலந்திகள், வட்டையறைச் சிலந்திகள் உட்பட பல வகையான சிலந்திகள் உள்ளன.
கத்தரி, வெண்டை, பருத்தி, தக்காளி, உருளை, தானியங்கள் மற்றும் விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணி கள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் போன்றவற்றை உட்கொண்டு தாவரங்களை பாதுகாக்கின்றன. சிலந்திகள் குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் உயிரினங் கள் ஒன்றையொன்று சார்ந்திருக் கும் வலைப்பின்னல் அறுபடாமல் இருக்க, முதுகெலும்புள்ள பிற இனங்களைபோல சிலந்தி இனங் களையும் பாதுகாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெபிலா வகை சிலந்தி
காஸ்டரகந்தா சிலந்தி வகை
ஹெட்ரோபோடா சிலந்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT