Published : 02 Jun 2021 06:29 PM
Last Updated : 02 Jun 2021 06:29 PM
முகக்கவசம் ஆயுதம் என்றால், தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சென்னைக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதோடு, மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, தாமதமாகவே எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர், இலுப்பூரிலும் யாரையும் சந்திக்காமல் வீட்டில் தனிமையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், தான் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக விராலிமலை, இலுப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகள், இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 2) முதன்முறையாக ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ''தமிழகத்தில் கிராமப்புற மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கூடுதல் முகாம் அமைத்துத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் ஆயுதம் என்றால், தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால் அச்சமின்றி, தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
விஜயபாஸ்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனையில் நேரில் பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் கண் கலங்கினர். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து 5 நாட்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. அதன் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது வேகமாக நடந்தால் மட்டும் மூச்சுத்திணறல் வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்” என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment