Published : 02 Jun 2021 05:58 PM
Last Updated : 02 Jun 2021 05:58 PM

கரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஜூன் 02) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் என்பது தற்போது மிகச் சிலருக்கே கிடைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களிலும்கூட 11 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட, வட்டார அளவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அதுவும் இல்லை. பேருந்துப் பயண அட்டை அரசின் சார்பில் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, அவர்களும் இந்த உதவியைப் பெறத் தகுதியானவர்கள் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், மாவட்ட அளவில் அவ்வாறு பேருந்துப் பயண அட்டைகள் பெற்றவர்கள் மிகவும் குறைவே.

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் இருக்கிற காரணத்தால், இந்த 5,000 ரூபாய் அவர்களுக்குத் தேவையில்லாதது. ஏற்கெனவே பல ஊடகவியலாளர்கள் இந்தத் தொகையை அரசுக்கே நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியுள்ளனர்.

உண்மையில் இந்த நிவாரணத் தொகை தேவைப்படும் ஊடகவியலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

எனவே, தற்போது உள்ள விதிகளை ஒரு முறை மட்டும் தளர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த 5,000 ரூபாய் உதவித்தொகை கிடைப்பதற்கும், உயிரிழந்தால் நிவாரணம் கிடைப்பதற்கும் தமிழக அரசு கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x