Published : 02 Jun 2021 02:14 PM
Last Updated : 02 Jun 2021 02:14 PM

ஊரடங்கில் வீணாகச் சுற்றுபவர்களைக் கட்டுப்படுத்த கரூரில் தெருக்கள் அடைப்பு: சிலிண்டர் விநியோகிப்போர் அவதி

கரூர்

ஊரடங்கில் வீணாகச் சுற்றுபவர்களைக் கட்டுப்படுத்த, கரூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளதால் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்வோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கரூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் வந்த நிலையிலும் பலர் போலீஸ் வாகன சோதனை நடத்தும் பிரதான சாலைகளைத் தவிர்த்துவிட்டு, குறுக்குச் சாலைகள் வழியாகப் பிரதான சாலைகளுக்குச் செல்வது எனத் தெருக்களில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கரூர் நகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து, நகரில் பிரதான சாலைகளை இணைக்கும் 11 குறுக்குச் சாலைகள் மேலும் 96 தெருக்களின் ஒரு பகுதியை மூங்கில் தடுப்புக் கழிகள், பேரிகார்டுகள் கொண்டு கடந்த வாரம் அடைத்தனர்.

இதன் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தெருக்களுக்குள் சுற்றித் திரிவது, போலீஸ் சோதனைச் சாவடியைத் தவிர்த்துவிட்டு பிரதான சாலைக்குச் செல்வது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கரூர் நகரில் சாலைகள், தெருக்கள் என 107 பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளுக்கு ட்ரைசைக்கிளில் சென்று காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காஸ் சிலிண்டர்களை ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குக் கொண்டு செல்ல, தடுப்புகளில் இருக்கும் சந்துகள் வழியாக சிலிண்டரை நுழைத்து அல்லது உருட்டிவிட்டு அதன் பிறகு மறுபகுதிக்குச் சென்று சைக்கிள் அல்லது தோளில் காஸ் சிலிண்டரைச் சுமந்து சென்று வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வோரைக் கருத்தில்கொண்டு அடைக்கப்பட்ட பகுதிகளில் காஸ் சிலிண்டர்களைத் தடையின்றிக் கொண்டுசெல்ல, ட்ரைசைக்கிள்கள் சென்று வரும் வகையில் அவசர வழிகளை ஏற்படுத்தித் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x