Published : 02 Jun 2021 01:13 PM
Last Updated : 02 Jun 2021 01:13 PM

மத்திய அரசு அரசியல் செய்வதாக தமிழக நிதியமைச்சர் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்: எல்.முருகன் விமர்சனம்

எல்.முருகன்: கோப்புப்படம்

சென்னை

இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என, தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 02) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தால்தான் மாநிலத்துக்குப் பெரும் நன்மைகளைக் கொண்டுவரமுடியும் என, பகிரங்கமாகச் சொன்னவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி. எப்பொழுதெல்லாம் ஆளும் கட்சியாக திமுக இருக்குமோ, அப்பொழுதெல்லாம் இதைச் சொல்வது அவரின் வழக்கம்.

ஆக, கருணாநிதியினையும் அவரின் போதனைகளையும் இப்பொழுதுள்ள திமுகவோ அதன் நிதி அமைச்சரோ சுத்தமாக மறந்தேவிட்டனர் என்பது தெரிகின்றது. 'முதல் அலைக்கு முழுவதும் முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் 2-வது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகப் போயிற்று' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தடுப்பூசி குறித்து நீங்களும், உங்களின் கூட்டணிக் கட்சிகளும் செய்த விமர்சனங்களால்தான் முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் 2-வது அலை தொடர்ந்தது. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டீர்களா என, மு.க.ஸ்டாலின்தான் அவர் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டும்.

தமிழகத்திற்கு நேற்றைய தினம் அவசரமாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அத்துடன் 75,000 கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. எந்தக் காரணம் கொண்டும் தடுப்பூசி போடுவதில் தொய்வு ஏற்படக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது.

மக்களின் உயிர் காப்பதில் மத்தியில் ஆளும் அரசுக்கு இருக்கும் அக்கறை, மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தடுப்பு மருந்துகள் (டோஸ்) உபயோகத்துக்கு வரும் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது வந்தால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 லட்சம் டோஸ் ஊசி போடலாம். மே மாதம் 8 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு வந்தது. இதை விட ஜூனில் 4 கோடி அதிகம் (50% அதிகம்) கிடைக்கும். ஜூலையில் அநேகமாக 20 கோடி வரலாம். ஆகஸ்ட் - டிசம்பரில் 220 கோடி!

இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள்ளேயே தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் உறுதி செய்துள்ளார். அநேகமாக, ஜூலை - ஆகஸ்ட்டில், இப்போதைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமல்லாமல், 18-44 வயதுக்கு உட்பட்டவர்களும் மத்திய அரசின் 'இலவச' திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி., மத்தியில் ஆளும் மோடி அரசானது எங்கள் கோரிக்கைகளைக் கேட்டு உடனடியாக நிறைவேற்றுகிறது எனக் கூறினர்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்காது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சரோ 'மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம்' என, பொய் பரப்புரையாற்றுகிறார். மேலும், மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்கிறார். மத்திய அரசு என்பது வேண்டியவர், வேண்டாதவர் என, அரசியல் செய்வதாக சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூறியதுபோல் மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து மாநிலத்துக்குப் பெரும் நன்மைகளைக் கொண்டுவாருங்கள் முதல்வர் ஸ்டாலின். உங்கள் அமைச்சர்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே நல் உறவு இருப்பின் மட்டுமே, மக்கள் நலன் காக்க முடியும் என அறிவுறுத்துங்கள்.

இந்த இக்கட்டான சூழலில் மக்களைக் காக்கத் தேவையான செயல்பாடுகள்தான் முக்கியம் என உணர்த்துங்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என்று எடுத்துரையுங்கள் உங்கள் சக அமைச்சர்களுக்கு. மக்கள் நலன் ஒன்றையே கவனத்தில் கொள்வோம்".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x