Published : 02 Jun 2021 01:07 PM
Last Updated : 02 Jun 2021 01:07 PM

2,457 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.497.32 கோடி ஓய்வூதிய நிலுவை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பணப் பலன்களை விடுவிக்கும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ரூ.682.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அன்றே தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை.

புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் கடந்த நிலையில், “ஓய்வூதியப் பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (2.6.2021) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x