Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, கடந்த 2019 டிசம்பரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1756.88கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர்செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் என்ற பெயரில் நிறைவேற்றப்படுகிறது.
தற்போது 3 மாவட்டங்களிலும் நீர் நிலைகளை இணைக்கும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 1058 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது. இதில், பிரதான குழாய் 105 கி.மீ. தூரத்துக்கும், கிளை குழாய் 953 கி.மீ. தூரத்துக்கும் பதிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, கோவை மாவட்டம் அன்னூர் ஆகிய 6 இடங்களில் ராட்சத நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொறியாளர் குழுவுக்கு ஏற்கெனவே தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதால், உரியகாலத்துக்குள் முடிக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக, திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களான வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றதால், சிறிது சுணக்கம் ஏற்பட்டது. பிறகு அரசின் கட்டுப்பாடுகளுக்குமத்தியில் தொழிலாளர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர்.
தொழிலாளர்கள் பற்றாக்குறை
கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் சற்றே தொய்வை சந்தித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 3 மாவட்டங்களிலும் நீர் உந்து நிலையங்கள் அமைத்தல், குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகளில் 1100 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது 400 தொழிலாளர்கள் வரை மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என திட்டத்துக்கான பொறுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் திட்டத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியுமா என்ற கேள்வி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
‘பிளாஸ்மா வெல்டிங்’
இதுகுறித்து திட்டத்துக்கான பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, "1100 தொழிலாளர்கள் பணி செய்து வந்த நிலையில், கரோனா பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் மேற்குவங்கம், ஒடிசா, பிஹார் உள்ளிட்ட தங்களது சொந்த மாநிலங்களுக்கு 700 பேர் சென்றுவிட்டனர். இதனால், திட்டப் பணிகளில் வேகம் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ள நிலையில், தொழிற்சாலைகளுக்கோ, இது போன்ற திட்டப் பணிகளுக்கோ தட்டுப்பாடு நிலவுகிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பொறுத்தவரை நீர் உந்துநிலைய கட்டுமானம், குழாய் பதிப்பு பணிகளில் உலோகங்களை கட்டிங் செய்வது, குழாய்களை கட்டிங் செய்வது அவசியமான ஒன்று. ஆக்சிஜன் இல்லாததால், இப்பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் கட்டிங் பணிகளுக்கு ஆக்சிஜன் தேவையில்லாத லேசர் முறையிலான ‘பிளாஸ்மா வெல்டிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான இயந்திரங்களை, திட்டத்தை மேற்கொள்ளும் தனியார்ஒப்பந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள், ஓரிரு தினங்களில் தொடங்கிவிடும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT