Last Updated : 01 Jun, 2021 05:22 PM

3  

Published : 01 Jun 2021 05:22 PM
Last Updated : 01 Jun 2021 05:22 PM

புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம் மக்களுக்கான சேவையில் இல்லை: எம்.பி. வைத்திலிங்கம் விமர்சனம்

புதுச்சேரி

புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம், மக்களுக்கான சேவையின் மீது இல்லை என்று எம்.பி. வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த ஒருமாத காலமாக புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பும், இறப்பும் மிக அதிக அளவில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக இங்கும், அங்குமாகத் தேடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிச் செல்லும் நேரத்தில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் உயிர் இழப்புக்கும் ஆளாகின்றனர்.

கரோனா தொற்று முதல் அலையில் ஓராண்டு முழுவதும் இல்லாததை விட தற்போது ஒரு மாத காலத்தில் 812 பேர் மிக, மிக அதிக அளவு உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. எங்கு, யாரைச் சந்தித்து உதவி பெறுவது என்ற நிலையும் இல்லை. மேலும், மருத்துவமனைக்குச் சென்றால் இறந்துவிடுவோம், உயிர் போனாலும் குடும்பத்தினருடையே இறக்கலாம் என்று வீட்டிலேயே இருந்து மருத்துவம் பெற்றுக்கொண்டு இறந்தவர்கள் இந்த எண்ணிக்கை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. சுனாமியின்போது ஏற்பட்ட உயிரிழப்பைவிட தற்போது அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி செய்ய மக்களால் இனம் காட்டப்பட்டவர்கள் மருத்துவ வசதி கிடைக்க, உதவி கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் உதவி கேட்பதற்குக்கூட யாரும் இல்லை. மக்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய அவர்களுக்கு என்ன தடை உள்ளது. அவர்களுக்குரிய பதவியைக் கேட்பது, அவர்களது உரிமை. ஆனால், மக்களுக்கான சேவையைச் செய்யாமல் மறந்திருக்கிறார்கள். நாற்காலியின் மீது உள்ள வெறித்தனம், மக்களுக்கான சேவையின் மீது இல்லை.

காங். தலைவரின் மகளான ஆளுநருக்குப் பாராட்டு

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருப்பதால், ஆட்சியாளர்கள் செய்யாததை முனைந்து செய்து வருகின்றார். தனது அதிகார எல்லையைத் தாண்டி செய்கிறார். அதனால் அவர் ஒருவர் பாராட்டப்பட வேண்டியவராக உள்ளார். ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எதையும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டோர்களைச் சந்திக்காததன் காரணத்தையும் அவர்கள் சொல்ல வேண்டும். ஆறுதல் சொல்லக்கூட அரசு செயல்படவில்லை".

இவ்வாறு எம்.பி. வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x