Published : 01 Jun 2021 04:59 PM
Last Updated : 01 Jun 2021 04:59 PM
பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளை என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 01) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், அதாவது டிசம்பர் 2019 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து, 2020 ஏப்ரல் மாதத்தில் 19.9 அமெரிக்க டாலராக வீழ்ச்சி அடைந்த நிலையிலும், இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசு துறந்து நிற்பது அவமானகரமானது.
தனியார்துறை கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபத்திற்கு மக்கள் நலனை பலியிட்டு வரும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயலுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியமாகும்.
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தொடங்கி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கடந்த 15 மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை முறையே ரூபாய் 11.77 மற்றும் 13.47 என உயர்த்தி இருக்கிறது.
நோய்த்தொற்று இரண்டாம் அலையாகத் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், கடந்த மே மாதம் மட்டும் 13 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
பாஜக தலைமையில் மோடி அரசு பொறுப்பேற்ற 2014-15ஆம் ஆண்டில் ரூ.74 ஆயிரத்து 150 கோடி என்ற அளவில் இருந்த எரிபொருள் எக்சைஸ் வரி வருவாய் ஜனவரி 2021-ல் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், எரிபொருள் நுகர்வோர் தலையில் செலவுச் சுமை கழுத்து முறியும் அளவில் ஏற்றப்பட்டிருப்பதை உணர முடியும்.
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புக்கு முடக்கப்பட்ட, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விகிதங்கள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.
சுயதொழில் புரிவோர், தினக்கூலி வேலைக்குச் செல்வோருக்கு இருசக்கர வாகனங்களும், சுயதொழில் பிரிவில் மூன்று சக்கர, நான்கு சக்கர வாடகை வாகனங்களும் தவிர்க்க முடியாத தேவை ஆகியுள்ளன. இதனை உணர்ந்து, மக்கள் நலனைக் காக்கும் கடமைப் பொறுப்புகளைக் கைகழுவிய மத்திய அரசும், மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வரியினங்களை வற்றாத வருவாய் ஆதாரமாகக் கருதுவது தவறான கருத்தாகும்.
மக்களின் வருவாய் ஆதாரங்கள் முடக்கப்பட்டதால், வாங்கும் சக்தி இழந்து நிற்கும் மக்களிடம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருவாய் தேடுவது, அரசு குடிமக்கள் மீது நடத்தும் பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகும்.
மத்திய பாஜக அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை 60 சதவீதம் குறைத்து நியாய விலை நிர்ணயிக்க வேண்டும். பொருளாதார வல்லுநர்கள் கூற்றுப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.50-க்கும், டீசல் லிட்டர் ரு.40-க்கும் விற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
மக்கள் அத்தியாவசியப் பொருளான எரிபொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு மீளப் பெற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT