Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

டெல்டா மாவட்டங்களில் முடிவடையாத தூர்வாரும் பணிகள்: மேட்டூர் அணை திறப்பு தள்ளிப் போகுமா?

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அப்போது, சுமார் 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

கடந்த 2012 முதல் 2019-ம் ஆண்டு வரை மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்ததால் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு ஏறத்தாழ 1.25 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

நடப்பு ஆண்டு மேட்டூர் அணையில் மே 31-ம் தேதி நிலவரப்படி 97.40 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால், அணை வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ம் தேதிக்கு இன்னும் 11 தினங்களே உள்ள நிலையில், அணை திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.

தூர்வாரும் பணிகள்

டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மே 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, பல இடங்களில் கடந்த வாரம்தான் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர்அணை திறக்கப்படுமா? அல்லது தள்ளிப் போகுமா என விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று, விவசாயிகளிடம் கலந்தாலோசித்து தூர்வாரும் பணிகளை தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம்.

11 நாட்களே உள்ளன

இந்நிலையில், வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இதுகுறித்து அரசு இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

மேலும், தூர்வாரும் பணிகளை அதற்குள் முழுமையாக முடிக்க வாய்ப்பு இல்லை என்பதால், மீதமுள்ள தூர்வாரும் பணிகளை தள்ளி வைத்துவிட்டு, வரும் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் செய்து கொள்ளலாம்.

மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு அணையை திறப்பது தான் நல்ல முடிவாக இருக்கும். எனவே, இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் தூர்வாரும் பணிகளை முன்னதாக தொடங்க முடியவில்லை. இருப்பினும், தற்போது தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி ஓரிருநாளில் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x