Published : 31 May 2021 08:24 PM
Last Updated : 31 May 2021 08:24 PM
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர்கள் ஆலோசனை நடத்தினர்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்தும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதாக வரும் குற்றச்சாட்டு குறித்தும் அவர்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விவாதித்தனர்.
கூட்டம் முடிந்தபின்னர் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முழு ஊரடங்கு நல்ல பலனை தர ஆரம்பித்துள்ளது. அதனால்தான், மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்னர் 1500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 700 க்கும் கீழ் வந்துள்ளது.
ஒரு வாரத்தில் மதுரையில் கரோனா பாதிப்பு இல்லாத நிலை வரும். மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தவும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஸன் படுக்கைகளை உயர்த்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யவதை கண்காணிக்க மதுரையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் 90 லட்சம் மதிப்பில் நிரந்தர ஆக்ஸிஸன் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிசன் தயாரிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT