Published : 31 May 2021 08:09 PM
Last Updated : 31 May 2021 08:09 PM
ஆம்பூரில் கரோனா விதிமுறைகளை மீறித் தனியார் தோல் தொழிற்சாலைகளில் அதிக அளவிலான ஆட்களைப் பணியமர்த்தி வருவதால், குறைந்துவரும் கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகத் திகழ்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி போன்ற பகுதிகளில் அதிக அளவிலான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக, ஆம்பூர் நகரம் தோல் தொழிலில் முன்னணி நகரமாக விளங்கி வருகிறது. இதனால் ஆம்பூரை 'டாலர் சிட்டி' என்றும் அழைப்பதுண்டு.
ஆம்பூர் தாலுக்காவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெரிய தோல் தொழிற்சாலைகளும், 'ஜாப் ஒர்க்' போன்ற சிறிய வகை தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன. இத்தொழிற்சாலைகளை நம்பி சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவல் காரணமாக, ஏற்றுமதி தொழில் செய்யக்கூடிய தொழிற்சாலைகள் 50 சதவீதப் பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம், அந்தத் தொழிற்சாலைகளிலும் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என, அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஆனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிடும் தனியார் தோல் தொழிற்சாலைகள் 100 சதவீதத் தொழிலாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தனியார் தோல் தொழிற்சாலைகளில் கரோனா விதிமுறைகளை யாரும் கடைப்பிடிக்காமல் இருப்பதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்துவரும் கரோனா நோய்த்தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஆம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட பெரியாங்குப்பம், சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பட்டு, சோலூர், விண்ணமங்கலம், வெங்கடசமுத்திரம் ஆகிய பகுதிகளில், பெரிய பெரிய தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 4,000 முதல் 5,000 தொழிலாளர்கள் வரை வேலை செய்து வருகின்றனர்.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக 50 சதவீதத் தொழிலாளர்களை மட்டுமே பணிக்கு வர வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். ஆனால், 100 சதவீதத் தொழிலாளர்கள் பணிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது, பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைக்குச் சொந்தமான வேன், பேருந்துகளில் தொழிலாளர்கள் மூட்டைபோல் அடுக்கி ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
அதேபோல, தொழிற்சாலைக்கு உள்ளேயும் தனி மனித இடைவெளி இன்றி அருகருகே அமர்ந்து அனைவரும் வேலை செய்து வருகின்றனர். தினந்தோறும் கிருமி நாசினி கொண்டு தொழிற்சாலை வளாகம் சுத்தம் செய்யப்படுவதில்லை. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் யாருக்காவது ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானால் அனைவரின் நிலை என்ன என்பதை தொழிற்சாலை நிர்வாகம் உணரவில்லை.
பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'கருப்பு பூஞ்சை' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகும் அவர் பணியாற்றிய தோல் தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, சக தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனையோ மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற தவறுகளை மாவட்ட நிர்வாகம் தடுக்க முன்வர வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "அரசு உத்தரவு பேரில், 50 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளோம். இருப்பினும், இது தொடர்பாக வந்த புகாரின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மூலம் தோல் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
அதில், விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால், அந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கரோனா குறித்த விழிப்புணர்வும், தடுப்பூசி போட்டுக்கொள்ள தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் குறைக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு தராத எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT