Published : 31 May 2021 06:15 PM
Last Updated : 31 May 2021 06:15 PM
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்து, அவற்றுக்கும் உணவளிக்க வேண்டும் என, தமிழக கால்நடைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக, உணவின்றித் தவிக்கும் தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி, சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 31) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கால்நடைகளுக்கு உணவளிக்க, ஆளுநர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அதில் இருந்து, 823 கால்நடைகள், 102 குதிரைகள்,17 ஆயிரத்து 979 தெருநாய்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகளுக்கு உணவளிக்கச் செல்வோருக்கு 123 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு ஒதுக்கீடு செய்த 9.2 லட்சம் ரூபாயை இன்னும் விடுவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் நியமித்த குழுத் தரப்பு வழக்கறிஞர், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தெருநாய்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், நாய்களுக்காக பால் பவுடர்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை நாய்களுக்குக் கொடுக்க முடியாது என்பதால், ஏழை மக்களுக்கு அதை வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.
இதையடுத்து, தெரு விலங்குகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விரைவில் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களின் நிலையை அறிந்து அவற்றுக்கும் உணவளிக்க வேண்டும் எனவும், அதற்கு ஐஐடி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், பால் பவுடரைத் தகுதியான நபர்களைக் கண்டறிந்து வழங்க அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT