Published : 31 May 2021 05:59 PM
Last Updated : 31 May 2021 05:59 PM
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலுக்குத் தேர்தலில் சீட் வழங்கியிருந்தால், வாணியம்பாடி தொகுதியும் கையை விட்டுப் போயிருக்கும் என, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் அதிமுக நகர அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் இன்று (மே 31) கூறியதாவது:
"தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாள் ஒன்றுக்கு 500 வரை இருந்தது. தற்போது 2,500-ஐக் கடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலையின்போது தினசரி பாதிப்பு 80 வரை இருந்தது. தற்போது 500-ஐக் கடந்துள்ளது.
அதிமுக அரசுக்குப் பொதுமக்கள் எப்படி ஒத்துழைப்பு அளித்தார்களோ அதேபோல தற்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முழு ஊரடங்கைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகளில் கரோனா 3-வது அலை, 4-வது அலையைக் கடந்துள்ளது. அங்கு கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து, தடுப்பூசியை அனைவரும் போட்டுள்ளதால் பெரிய பாதிப்பு இல்லை. நானும் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளேன். அதனால் என்னால் அனைத்து இடங்களுக்கும் சென்றுவர முடிகிறது.
அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் 10 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தடுக்க புதிய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதிமுக அரசு கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர என்னென்ன நடவடிக்கைகளைக் கையாண்டதோ, அதே வழிமுறைகளைத் தற்போதைய அரசும் கையாள வேண்டும். அதற்கான ஆலோசனைகளை முன்னாள் முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலைக் கட்சியை விட்டு நீக்கியதற்கு நான்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமை எடுத்த முடிவுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டாரே தவிர கட்சியை மதிக்கவில்லை.
தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளை அவர் முறையாகச் செய்யவில்லை. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை நகர்ப்புறங்களுக்கு மட்டுமே அவர் செலவழித்தார். கிராமப் பகுதிகளுக்கு எந்த வசதியும் அவர் செய்து தரவில்லை.
குறிப்பாக, அவரது தொகுதிக்கு உட்பட்ட நெக்கனா மலைப்பகுதிக்கு சாலை வசதியை நான் ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆனால், அதற்கான முயற்சிகளை அவர் செய்ய முன்வரவில்லை. இதனால் அவர் மீது தொகுதி மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வாணியம்பாடி தொகுதி. இந்தத் தொகுதியில் சுமார் 22 ஆயிரம் வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. அமைச்சராக இருந்த நிலோபர் கபீல் தன் தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளை முறையாகச் செய்திருந்தால், எம்.பி. தேர்தலில் வேலூர் அதிமுக வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.
இதையெல்லாம் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னிடம் புகாராகத் தெரிவித்தனர். அதை நான் கட்சித் தலைமையிடத்தில் தெரிவித்தேன். மேலும், இந்தத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் நிலோபர் கபீலுக்கு சீட் வழங்கியிருந்தால், வாணியம்பாடி தொகுதியும் கைவிட்டுப் போயிருக்கும். புதியவருக்கு வாய்ப்பு அளித்ததால், வாணியம்பாடி தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது.
2016-ம் ஆண்டு தேர்தலின்போதே நிலோபர் கபீலை நான் பரிந்துரை செய்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாணியம்பாடி தொகுதிக்கு வேறு யாரும் இல்லையா? என என்னிடம் கேட்டார். நகராட்சித் தலைவராக இருக்கிறார், சீட் கொடுத்தால் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு நிறைய செய்வார் என நான்தான் அவருக்கு சிபாரிசு செய்தேன்.
ஆனால், அவர் மக்களைப் புறக்கணித்ததால் கட்சித் தலைமை அவரைப் புறக்கணித்தது. இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில், கட்சித் தலைமை என்னிடம் கருத்து கேட்டபோது, நான் எனது முடிவைத் தெரிவித்தேன். அதன்பேரில், கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்க மறுத்தது.
அதனால்தான் அவர் கட்சியை முழுமையாகப் புறக்கணித்தார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அவர் தேர்தல் பணியாற்றவில்லை. தேர்தலுக்குப் பிறகு திருப்பத்தூர் திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து நிலோபர் கபீல் பேசியுள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அதற்கு மேல் அவரை எப்படிக் கட்சியில் வைத்திருக்க முடியும்? எனவே, அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். அரசு கல்லூரி, மருத்துவமனை, பேருந்து நிலையம், சாலை விரிவாக்கப் பணிகள், பாலிடெக்னிக் கல்லூரி, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் என, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளேன்.
என் தொகுதியான ஜோலார்பேட்டை தொகுதிக்கு ரூ.184 கோடி மதிப்பில் அனைத்து குக்கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம் விரிவுபடுத்தினேன். இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செய்த என்னையே மக்கள் புறக்கணித்துவிட்ட நிலையில், நிலோபர் கபீல் போன்றவர்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகின்றன. அதற்குள்ளாக கரோனா அலை வேகமாகப் பரவி வருவதால் புதிய அரசு குறித்து எதுவும் தற்போதைக்குச் சொல்ல முடியாது. 6 மாதங்கள் கழியட்டும். அதன்பிறகு என்னென்ன குறைகள் உள்ளன என்பது குறித்து அதிமுக தலைமை அறிவிக்கும்".
இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment