Published : 31 May 2021 04:07 PM
Last Updated : 31 May 2021 04:07 PM
மருத்துவ வசதிகள் குறைந்த நீலகிரி மாவட்டத்துக்கு, ஒரே ஆயுதமான தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தி உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் திக்காஷ் அறக்கட்டளை சார்பில் இன்று (மே 31) ரூ.50 லட்சம் மதிப்பில் 37 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 100 கைகழுவும் பேசின்கள் மற்றும் 50 ஆயிரம் முகக்கவசங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த அறக்கட்டளை நிர்வாகிகள், ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷிடம் வழங்கினர்.
இந்நிலையில், மருத்துவ வசதிகள் குறைந்த நீலகிரி மாவட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறும் போது, "தன்னார்வலர்கள் பலர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர். இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தன்னிறைவு அடைந்துள்ளோம். மேலும், படுக்கைளும் காலியாக உள்ளன.
அதிகரிக்கும் தொற்றை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து சிலர் வெளியேறுகின்றனர். இது தொடர்பாக, 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள பகுதிகளில் செயல்படும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்களை பணியமர்த்தக் கூடாது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வந்தால், அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா நோய்க்கான 13 அறிகுறிகளில் ஏதாவது இருந்தால், அந்த நபர்களுக்கு உடனே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
முதல்வரின் ஆய்வு கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் தடுப்பூசி தேவை குறித்து தெரிவித்துள்ளோம். குறைவான வசதிகளும், காலியான மருத்துவ பணியிடங்கள் அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்ததுக்கு அதிகளவில் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், நீலகிரி மாவட்டத்துக்குள் வர மீண்டும் இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரியுள்ளாம். இ-பதிவு முறையில் அதிகமான வெளி மாவட்ட நபர்கள் மாவட்டத்துக்குள் வருவதால், தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT