Published : 31 May 2021 03:21 PM
Last Updated : 31 May 2021 03:21 PM
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் கையால் வழங்கப்படும் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது"க்கு இந்த ஆண்டுக்கு விருது பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றுவது, சமூகத்தில் இக்கட்டான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவுவது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, பொதுமக்களைக் காக்க, சமூக அக்கறையுடன் செயல்படுவது ஆகிய வீரதீரச் செயல் செய்தவர்களை கவுரவித்து அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசால் வீர தீரச் செயல்களுக்கான விருது ஆண்டுதோறும் பணமுடிப்புடன் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விண்ணப்பிக்க அரசு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு:
“துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.
2021ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி/ 2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்”.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT