Published : 31 May 2021 03:02 PM
Last Updated : 31 May 2021 03:02 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 1,058 மெட்ரிக் டன் எடையுள்ள காய்கறி மற்றும் பழ வகைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழ வகைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 6 ஒன்றியங்களில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழ வகைகள் விநியோகம் செய்ய மொத்தம் 452 நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.59 கோடிக்கு காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 7 நாட்களுக்கு விற்பனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர் கூறியதாவது:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 271 நான்கு சக்கர வாகனங்கள், 129 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 52 தள்ளுவண்டிகள் என, மொத்தம் 452 நடமாடும் வாகனங்கள் மூலம் 1,058.05 மெட்ரிக் டன் எடையுள்ள காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 750 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஊடரங்கு அடுத்த 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதேபோல நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் மட்டும் அதிக அளவிலான நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சியில் மட்டும் 310 நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய 4 இடங்களில் காய்கறிகள் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, அங்கிருந்து பிரித்து மாவட்டம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழ வகைகளுக்கான விலையை வேளாண்மை அலுவலர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நிர்ணயித்து அதை வியாபாரிகளுக்கு விலைப் பட்டியலாக வழங்குகிறார்கள்.
அதிகாரிகள் நிர்ணயித்த விலையில்தான் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும். விலையை அதிகரித்து விற்றாலோ, தரமில்லாத காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தாலோ அல்லது தங்கள் பகுதிக்குக் காய்கறிகள் சரியாகக் கிடைக்காவிட்டால், பொதுமக்கள் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 04179-220020 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
அந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தோட்டக்கலைத்துறையினர் கொண்ட தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கான அனுமதியும் உடனடியாக ரத்து செய்யப்படும்.
மேலும், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் அவர்கள் 3 அல்லது 5 மணி நேரத்துக்கு விற்பனை செய்ய வேண்டும். அப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு காய்கறிகள் விற்பனையாகாவிட்டால், வேளாண்மை அலுவலகத்தில் தெரிவித்துவிட்டு அடுத்த இடத்துக்குச் சென்று பொருட்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு காய்கறி தட்டுப்பாடு என்ற நிலை இருக்காது என நம்புகிறோம்.
கடந்த வாரத்தைக் காட்டிலும் நடப்பு வாரத்தில் விற்பனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் நடமாடும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் மாவட்டம் முழுவதும் கூடுதல் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய விரும்புவோர் அதற்கான சான்றுகளுடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். அங்கு அவர்களுக்கான அனுமதிச் சீட்டு முறையாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை நடமாடும் வாகனங்கள் மூலமாகப் பெற்றுக்கொண்டு முழு ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து கரோனா பரவலைத் தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும்".
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment