Published : 31 May 2021 01:44 PM
Last Updated : 31 May 2021 01:44 PM
தற்போது கையிருப்பில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழகத்தில் உள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடமாடும் மளிகைக் கடைகள் மூலம் வீடு தேடி வரும் பொருட்கள் சேவையை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தடுப்பூசிகளை முறையாகத் தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்ற பாஜகவினரின் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கும்போது, ''குற்றச்சாட்டுகள் வைப்பதைக் காட்டிலும் தடுப்பூசியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அரசுக்கு உறுதுணையாக இருந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.
தடுப்பூசிகளைப் பொறுத்தவரை இதுவரை மத்திய அரசு சார்பில் வந்திருப்பது 83 லட்சம். தடுப்பூசிகளைப் பெறுவதற்காக தமிழக முதல்வர் கட்டியிருக்கும் தொகை ரூ.85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் நாம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம். இதில் 18 - 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் இன்னமும் 12 லட்சம் தமிழகத்துக்கு வர வேண்டும்.
மத்திய அரசு நமக்கு அளித்துள்ள 83 லட்சமும், நாம் கொள்முதல் செய்துள்ள 13 லட்சமும் சேர்த்து 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 87 லட்சம். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT