Published : 31 May 2021 12:53 PM
Last Updated : 31 May 2021 12:53 PM
சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி இன்று (மே 31) வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கரோனா பேரிடர் சமயத்தில் தமிழகத்தில் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. திமுக அரசு பதவியேற்று 24 நாட்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் துறை ரீதியான பணிகள் குறித்து ஆய்வு செய்யவே காலம் போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தொண்டர்களிடம் அரசியல் குறித்து சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி, "அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சசிகலா அதிமுகவில் இல்லை.
சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலாவை முன்னிறுத்தி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்தக் குழப்பத்திற்கு ஒரு அதிமுக தொண்டரும் செவிசாய்க்க மாட்டார்கள்.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து, இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசைதிருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
அவர்களுடைய எண்ணம் ஈடேறாது. சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை. மாறாக, சசிகலாதான் தொண்டர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. அமமுகவைச் சேர்ந்தவர்.
சசிகலா தன்னோடு இருக்கும் ஒருசில நபர்களைத் தேர்வு செய்து இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றி அடையாது. இதன் மூலம் சசிகலாதான் ஏமாறுவார்.
அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் சாதாரண நிலையில் இருந்த சசிகலா, தற்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஜெயலலிதாவின் பழி பாவம் சசிகலாவையே சாரும்.
சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. கரோனா பேரிடர் சமயத்தில் அவரவர் தங்கள் தொகுதியில் இருந்து அந்த தொகுதியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி தனித்தனியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என, சசிகலாவை முன்னிறுத்தி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். இதற்கு சசிகலா இரையாகிவிடக் கூடாது" என கே.பி.முனுசாமி பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT