Published : 31 May 2021 11:56 AM
Last Updated : 31 May 2021 11:56 AM

பழனி முருகன் கோயில் சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

பழநி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மையத்தைத் தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி. 

பழநி

பழனி முருகன் கோயில் சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்ட மக்களின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ’பழநி சேம்பர் ஆப் காமர்ஸ்’ என்ற வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பழநி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இதன் தொடக்கவிழா இன்று பழநியில் நடந்தது. இதற்குத் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்சிஜன் மையத்தை உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில் பழநி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மையத்தை அமைத்துக்கொடுத்த வணிகர் சங்கத்திற்குப் பாராட்டுகள். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதனால் நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் பயன்பெறுவர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், திண்டுக்கல் மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு‌ அல்லாமல் மற்ற மாவட்ட மக்களின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்யும். முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து கரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பழனி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக அமையவுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த மையம் சில தினங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x